
மேட்டூர் அருகே, 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவர் தன் குழந்தைகளுடன் மேட்டூர் காவிரி பாலம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது மேட்டூர் மருத்துவமனை காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நவீன்குமார் (28) என்பவருடன் லோகநாயகிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், தனது அலைப்பேசியில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போனதால் நவீன்குமாரிடம் கொடுத்து பேட்டரிக்கு சார்ஜ் போட்டுத் தரும்படி கேட்டுள்ளார். அப்போது நவீன்குமார், சார்ஜ் போட்ட பிறகு அலைப்பேசியை லோகநாயகியின் மகளிடம் கொடுத்து அனுப்புவதாகக் கூறியுள்ளார்.
அதன்பேரில் லோகநாயகி, தனது 12 வயதே ஆன மகளை நவீன்குமார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். சிறுமி தனியாக வந்திருப்பதை அறிந்த நவீன்குமார், அவரை ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத குப்பைக் கிடங்கு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய தாயிடம், நவீன்குமார் தன்னை வன்புணர்வு செய்த சம்பவம் குறித்து சிறுமி அழுது கொண்டே சொல்லி இருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த லோகநாயகி, மேட்டூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கார்த்திகேயனி, நவீன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, மார்ச் 29ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். நவீன்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.