Skip to main content

தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி - தனிப்படை அமைத்து தேடும் காவல்துறை

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Life sentence for a fugitive prisoner! Police looking for personal set up!

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா குப்பிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் என்கிற ராஜா(45). இவர், கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து கடலூர் மத்தியச் சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து வருகிறார். 

 

இந்நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இவர் மீது உள்ள மூன்று வழக்குகள் சம்பந்தமாக விசாரிக்க அரவக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் ஆஜர்படுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு விசாரணை முடிந்து, மீண்டும் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க பேருந்தில் அழைத்துச்சென்றுள்ளனர். 

 

ஆயுள் தண்டனை கைதி ராஜாவுடன், ஆயுதப்படை காவலர்கள், நேதாஜி, உதயகுமார், ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் பயணித்துள்ளனர். சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக அவர்கள் வந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகிலுள்ள மாடூர் பாளையம் டோல்கேட் அருகில் வந்தபோது அதிகாலை 2 மணி அளவில் கைதி ராஜா பேருந்திலிருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். 

 

ராஜாவை அழைத்து வந்த ஆயுதப்படை காவலர்கள் நேதாஜி, உதயகுமார், ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் இது குறித்து தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் ராமதாஸ் தலைமையிலான போலீசார், டோல் கேட் அருகில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தண்டனை கைதி தப்பியோடியது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி ராஜாவை பிடிப்பதற்காக ஒரு தனிப்படை அமைத்துள்ளார். தனிப்படை போலீசார், திண்டுக்கல் உட்பட ராஜா எங்கெல்லாம் ஏற்கனவே தங்கியிருந்தார். அடிக்கடி எங்கு செல்வார் என்பது குறித்த விசாரணை அடிப்படையில் ராஜாவை அப்பகுதிகளில் தீவிரமாக தேடிவருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்