ADVERTISEMENT

கொலை வழக்கில் அண்ணன் தம்பிக்கு ஆயுள் தண்டனை!

08:41 PM Dec 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகில் உள்ளது டி. புதுப்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த, அண்ணாமலை என்பவரது மகன் ராயர் (58 வயது). விவசாயியான இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் துரைசாமி மகன்கள் சிவபாலன் (வயது 20), குமார் (வயது 19) ஆகிய இருவருக்கும் இடையே, இருவரின் வீடுகளுக்கு இடையே உள்ள பொதுச்சந்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அந்தப் பொதுச் சந்தின் வழியாக, ராயர் தனது மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிவபாலன், குமார் ஆகிய இருவரும் ராயரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது ராயர் தலையில் மரக்கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராயரை, அவரது உறவினர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராயர் இறந்து போனார்.

இதுகுறித்து நாயரின் மனைவி ராஜகுமாரி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் சிவபாலன் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி செங்க மலர்ச்செல்வன் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளிகள் சிவபாலன் குமார் ஆகிய இரு சகோதரர்களுக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் வேலவன் ஆஜராகி வாதாடி உள்ளார். அண்ணன் தம்பி இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்த தகவல், புதுப்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT