ஆத்தூர் அருகே சிறுமியை கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இரு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடியைச் சேர்ந்தவர் எம்ஜிஆர் என்கிற ராமச்சந்திரன் (31). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் கார்த்திகேயன் (31). கடந்த 2011ம் ஆண்டு ஏப். 25ம் தேதி இரவு, அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த எம்ஜிஆரும், கார்த்திகேயனும் சிறுமியின் வாயில் துணியை வைத்துப் பொத்தி, அருகில் உள்ள உப்பு ஓடை பகுதிக்குக் கடத்திச் சென்றனர். அங்கு வைத்து இருவரும் சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த ஒருவர் டார்ச் லைட் அடித்தார். அதைப் பார்த்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை நாசப்படுத்திய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பத்மா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, வாலிபர்கள் எம்ஜிஆர் என்கிற ராமச்சந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.