Skip to main content

மக்களுக்கு உடனடியாக வாழ்வூதியம் வழங்க வேண்டும்: தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு, மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ள கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இன்று (22.03.2020) அனைத்திந்திய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. வரும் மார்ச்சு 31ஆம் நாள் வரை அனைத்திந்திய அளவில் தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலுருமிருந்து 75 மாவட்டங்களை இதர பகுதிகளிலிருந்து துண்டித்து, தனிமைப்படுத்த வேண்டுமென இந்திய அரசு அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் உள்ளன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் வரும் மார்ச்சு 31 ஆம் நாள் வரை முழுமையான பணி முடக்கம் செயலாக்கப்படவுள்ளது. போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நடவடிக்கைகள் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவினாலும், இம்முடக்கம் காரணமாக எழும் சமூகப் பொருளியல் சிக்கல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து, கடந்த 19.03.2020 அன்று அறிக்கை வெளியிட்ட நாம், இப்பொருளியல் முடக்கம் காரணமாக பாதிக்கப்படும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியம் வழங்க வேண்டுமெனவும் அறிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது.  
 

workers



ஏற்கெனவே உள்ள பொருளியல் மந்தத்தோடு, கொரோனா வைரஸ் சிக்கல் இணைந்து ஒட்டு மொத்தப் பொருளியல் நடவடிக்கைகளும் முடங்கியுள்ள இச்சூழலில், இவற்றால் பாதிக்கப்படும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, அதனைத் தட்டிக் கழிப்பது சரியல்ல.

 

எனவே, தேசியப் பேரிடர் கால வாழ்வூதியம் வழங்கும் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஆகும் அதிகபட்ச செலவான 13,000 கோடி நிதியை - தேசியப் பேரிடர் கால உதவியாக இந்திய அரசு 75 விழுக்காடும், தமிழ்நாடு அரசு 25 விழுக்காடும் எனப் பகிர்ந்து கொள்ளலாம்.

 

தமிழ்நாடு அரசின் வழியாக ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்பட வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு அவரவர்களுக்குரிய ரேசன் கடைகளின் வழியாக வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், இந்தப் பேரிடர் காலத்தில் ரேசன் கடைகளில் வழக்கமாக வழங்கும் விலையில்லா அரிசிக்கு மேலாக, நாள் ஒன்றுக்குக் கூடுதலாக குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அரிசியை மானிய விலையில் ரூபாய் மூன்றுக்கு வழங்க வேண்டும். மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் வழங்கலை அரை மடங்குக் கூடுதலாக்கி, மானிய விலையில் வழங்க வேண்டும்.

 


 

விடுமுறை அறிவிக்கப்பட்ட சத்துணவு பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு செய்வதைப் போல், அம்மாணவர்களுக்குரிய சத்துணவைப் பாதுகாக்கப்பட்ட பொட்டலங்களில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.

 

 

அம்மா உணவகங்களின் உணவு வழங்கல் அளவை இரட்டிப்பாக்கி, அதற்குரிய கூடுதல் ஊழியர்களையும் இக்காலத்தில் அமர்த்தி மானிய விலை அம்மா உணவகங்களைக் கூடுதலாக அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

workers


 

சிறுதொழில்களுக்கு இடர்நீக்க நிதி வழங்குவதுடன், அவர்களது மின்சாரக் கட்டணத்திற்கும் சலுகை வழங்க வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அரைப் பட்டினிக்கும், சத்துக் குறைபாடுக்கும் ஆளாகி நோய்த் தொற்று அதிகப்பட தொடங்கி விடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.              

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.