Skip to main content

அடுத்தடுத்து மரணங்கள்: சிக்கலில் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் ! 

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

 

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவரால் லைப் கேர் செண்டர் என்ற குடி போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது.

 

l

 

போதையை மறக்கடிக்க மறுவாழ்வைப் பெற என இங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இங்கு சிகிச்சைக்காகத் தங்கியிருந்த சமயத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். வலிப்பு வந்து இறந்தனர் என மிகச்சாதாரணமாக சொன்னாலும் சிகிச்சை என்ற பெயரில் அங்கு விழுந்த தடியடி தாக்குதல் நடத்துவதாலே இறந்து போகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் அங்கு சிகிச்சைபெறுபவர்களின் உறவினர்கள். 

 

இந்த லைப் கேர் சென்டரில் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவரும், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலையத்தை சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலருமான தமிழ்ச்செல்வன் என்பவர் கடந்த 28-ம் தேதி மதுப் பழக்கத்தை மறக்கடிக்கும் சிகிச்சைக்காக இங்கு வந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

 

l

 

சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்ட சில நாட்களிலேயே காவலர் தமிழ்ச்செல்வன் கடந்த 1-ம் தேதி இறந்திருக்கின்றார். உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகக்கூறி இந்த இறப்பு சம்பவத்தை கே.கே.நகர் காவல்நிலையத்திற்கு தகவல் சொல்லாமல் மறைத்து தமிழ்ச்செல்வனின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி விட்டனர் லைப் கேர் சென்டர் ஊழியர்கள்.

 

உடல்நிலை சரியில்லாமல் தமிழ்ச்செல்வன் இறக்கவில்லை; சிகிச்சை என்ற பெயரில் அங்கு அவரை அடித்த அடியின் காரணமாகவே அவர் இறந்து விட்டார் என்று புகார் சொல்கிறார்கள் தமிழ்ச்செல்வனின் சொந்தக்காரர்கள். 

 

l

 

தமிழ்ச்செல்வனுக்கு இறுதி காரியங்கள் செய்யும்போது உடலை குளிப்பாட்ட சட்டையை கழற்ற உடல் எங்கும் இரத்த காயங்கள் இருப்பது கண்டு அதிர்ந்த அவரது குடும்பத்தினர் காரியம் முடிந்த கையோடு திருச்சி லைப் கேர் சென்டருக்கு நுழைந்த போது சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டும், ஹாலை விட்டு எங்கும் நகர்ந்திடாதபடி கால்கள் இரண்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ந்திருக்கின்றனர். 

 

இதுகுறித்து கே.கே.நகர் போலிசில் தகவல் சொன்ன போது 'புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே புகார் கொடுத்திருக்கிறார்கள் 

அங்கு சிகிக்சையில் உள்ளவர்கள் "நாங்கள் இங்கு நல்லாத்தான் இருக்கோம், ஆனால் இங்கு உள்ள திவான் எனச்சொல்லப்படும் ராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர்" என்று புகார் சொல்கிறார்கள். 

 

தமிழ்ச்செல்வன்

t

 

பாத்திமாபுரம் எனக்கு சொந்தவூர். நான் 3 மாதம் சிகிச்சைக்காகத்தான் இங்க வந்தேன். எனக்கு சரியானதும் இங்கேயே இருந்து மத்தவங்களையும் நீ பார்த்துக்க என்று சொன்னாங்க . நான் மாத்திரைகள் மட்டும்தான் கொடுப்பேன். அதற்கு மட்டும் தான் ஹால் உள்ளே நான் செல்வேன். மற்றபடி, வேறு எதுவும் எனக்கு தெரியாது. எங்கள் ஓனர் மணிவண்ணன் சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார் ஒருவர். 

 

இறந்த தமிழ்ச்செல்வனின் சகோதரர் மற்றும் அவரது ஊரைச்சேர்ந்த இளங்கீரன், அறிவழகன் உள்ளிட்டவர்களிடம் விசாரித்தபோது, "நாங்க கொண்டு வந்து சேர்த்தபோது நன்றாகத்தான் இருந்தாருங்க. காவல்துறை பணியில் இருப்பவர் குடி போதைக்கு அடிமையானதை கண்டு வருத்தப்பட்டோம். திருச்சி கே.கே.நகரில் இப்படியொரு சென்டர் இருப்பதாக விளம்பரம் மூலம் கேள்விப்பட்டு அவரை இங்கு கொண்டு வந்து சேர்த்துட்டு போனோம்.

 

ஒரு மாதத்தில குடியை மறந்து நல்ல படியா ஊர் திரும்புவார்ன்னு தான் காத்திட்டிருந்தப்ப இந்த சென்டர்லர்ந்து போன் வந்துச்சுங்க, தமிழ்ச்செல்வனுக்கு கொடுத்த மாத்திரை ஒத்துக்கல, அவருக்கு வலிப்பு வந்துச்சு, நாங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறப்பவே இறந்துட்டாருன்னு சொல்லி திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு பக்கம் உள்ள கே.எம்.சி. மருத்துவமனைக்கு வரச்சொன்னாங்க.

 

l

 

எங்க ஊர் பையன் ஒருவர் திண்டுக்கல்ல இருந்ததால அவரு உடனே திருச்சி வந்தப்ப கே.எம்.சி.மருத்துவமனைக்கு எதிரே ஆம்புலன்ஸ் ஒன்னு நின்னுட்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ்லதான் உடனே ஊருக்கு கொண்டு செல்லுங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம். நாங்களும் உடல் வந்ததும் இறுதிச்சடங்கு செய்தோம்.   உடலை குளிப்பாட்டும்போதுதான் உடம்பு முழுசா ஒரே ரத்த காயம் இருந்துச்சு, அத பாத்து அதிர்ந்த நாங்க இந்த மையத்தை தொடர்பு கொண்டோம், அவங்க சொன்ன பதில் திருப்தியா இல்ல.  ஊர்லயும் குளிப்பாட்டின பாடிய உடனே எரிச்சிடத்தான் சொன்னாங்க, நாங்க ஊர் கட்டுப்பாட்டுப்படி தமிழ்ச்செல்வன் உடம்ப நல்லடக்கம் செய்தோம்.

 

இங்கு வந்து விசாரித்த போது தான்,  தமிழ்ச்செல்வனை திவான் என்ற ராஜா கடுமையாக தாக்கினாருங்கிற விசயம் தெரியவந்துச்சு.   அந்த அடி தாங்காமத்தான் அவன் உயிரு போயிருக்குங்க. மொத்தத்துல அவன அடிச்சே கொன்னுட்டு ஒன்னும் தெரியாதது மாதிரி இன்னைக்கு ஒருத்தருக்கு அட்மிஷன் வேலையை பார்த்து ரூ.15 ஆயிரம் பணத்தையும் வாங்கிட்டானுவோ.

 

தமிழ்ச்செல்வனின் குடியை மறக்க வைப்பாங்க என்று பார்த்தா அவன் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டாங்க. தமிழ்ச்செல்வனின் மனைவி காயத்திரியும், அவர்களது குழந்தைகள் நிரைமதி மற்றும் வெங்கடேஷ் என்ற 4 மாதமே ஆன ஆண் குழந்தையும் அனாதையா நிக்குது என்றார். 

 


லைப் கேர் சென்ட்டரில் சிகிச்சையில் இருக்கும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக இருக்கும் வெங்கடேசன் என்பவர் நம்மிடம், நான் கொஞ்சம் குடிக்க ஆரம்பிச்சதால, நானே இந்த விலாசத்த கண்டறிந்து இங்க வந்தேன். அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுச்சு இங்க நடக்கற கூத்தெல்லாம் மனித உரிமைகள் மீறல்ன்னு.

 

இந்த மையத்தில் நிரந்தர டாக்டர் யாரும் இல்லைங்க, அடிச்சு மண்டைய உடச்சுட்டா ஒருத்தர் வர்றாரு கட்டு போட்டுட்டு போய்டுறாரு. மணிவண்ணன் மற்றும் திவான் என்ற ராஜா தான் இந்த மையத்தில் இருக்குறாங்க.  நான் வந்து சேர்ந்ததிலேர்ந்த இரண்டு பேர் பலி ஆயிருக்காங்க.

 

தமிழ்ச்செல்வன் எங்ககிட்ட நல்லாத்தான் பேசினாரு. யாரும் யாருகிட்டேயும் பேசக்கூடாதுன்னு சொல்லியே என்னையும் அடிச்சு துவைச்சுட்டாங்க. ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. வீட்ல உள்ளவங்களுக்கும் தகவல் கொடுக்க முடியல. ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் உங்களுக்கு சொல்லியனுப்புவோம் அப்பத்தான் யாரா இருந்தாலும் வரலாம்ன்னு சொல்லிட்டதால யாரையும் தொடர்பு கொள்ள முடியலைங்க.

 

கடந்த 2 வாரத்துக்கு முன்னாடி கண்ணன் என்ற ஒருத்தர அடிச்சே இவனுக கொண்ணுட்டானுவோங்க. இப்பத்தான் தெரிஞ்சுச்சு இவனுங்க கொன்னுட்டு கண்ணன் வலிப்பு வந்து உடம்பு சரியில்லாம செத்துட்டான்னு சொல்லி இங்குள்ள போலீஸ் ஸ்டேசனையும் சரி செஞ்சு வேலையை முடிச்சுட்டாங்க.

 

இங்க எங்கள அடிக்கறதுக்குன்னு ரமேஷ் மற்றும் ராஜாவை தனியாவே வச்சிருக்காங்க. நாங்க காசு கட்டிட்டு வந்துதான் இங்க இருக்கோம். எங்களுக்கு நல்ல சாப்பாடே இல்லைங்க என்றார். 

இதுகுறித்து தகவல் பெற்று வந்த கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசுவோ, "இந்தப் பகுதியில குடிபோதை மறுவாழ்வு மையம் இருப்பது தெரிந்த ஒன்றுதான். ஏற்கனவே கண்ணன் இறந்தப்பத்தான் நான் இங்க வந்து விசாரிச்சேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொன்னாலும் முறையா யாரும் கம்ப்ளைண்ட் கொடுக்கல. இப்பத்தான் கம்ப்ளைண்ட் ஒன்னு வந்துருக்கு.  முறையா விசாரிச்சு கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன்.

 

l

 

இவங்க ஊர்ல உடலை அடக்கம் செய்யும் முன்பு எங்ககிட்ட போன்லையாவது தெரிவிச்சிருக்கலாம், இல்ல அந்த ஊரு போலீஸ் ஸ்டேஷனிலாவது  சொல்லிருக்கலாம். இரண்டையுமே விட்டுட்டு இப்ப வந்திருக்காங்க. எங்க மேலதிகாரிங்கட்ட சொல்லிட்டு சட்டப்படி நடவடிக்கை கட்டாயம் எடுப்போம்" என்றார். இங்கு 27 பேர் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களில் பலரை, தற்போது அவர்களின் உறவினர்களே நேரில் வந்து சங்கிலிகளை அகற்றி அழைத்துச் சென்றுவிட்டனர் . 

 

லைப் கேர் சென்டர் குடி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சென்னை மனநல இயக்குனரகம் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர் நிரஞ்சனா தலைமையில் இருவர் நல்வாழ்வு மையத்தில் விதிமீறல் உள்ளதா என தற்போது ஆய்வு நடத்தி வருகிறார்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது