Skip to main content

'கள்ளச்சந்தையில் பால் விற்றால் உரிமம் ரத்து' - அமைச்சர் எச்சரிக்கை

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

bb

 

மிக்ஜாம் புயல் காரணமாக சில இடங்களில் நீர் தேங்கி நிற்பதால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டார். ஆய்வுக்கு பிறகு நேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், 'அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் ஆவின் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பதற்றம் அடைந்து அன்றாட தேவையை விட அதிக பால் பாக்கெட்டுகளை வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டாம். சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் நிலைமை சீரடைந்து வருகிறது. அம்பத்தூர் பால் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால் இந்த காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம்' என தெரிவித்திருந்தார்.

 

தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் கூடுதல் விலைக்கு பால் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. ஒரு லிட்டர் பால் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என அவர் எச்சரித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று, ஆவின் பாலை மக்களுக்கு வழங்காமல் கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார். 'தேவைக்கேற்ப மொத்த, சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு பால் விற்றாலோ அல்லது கள்ள சந்தையில் விற்றாலோ முகவரின் உரிமம் ரத்து செய்யப்படும். ஒரு சில இடங்களை தவிர சென்னையில் பால் விநியோகம் சீராக உள்ளது' என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! 

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The kalaignar memorial was inaugurated by CM MK Stalin

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

The kalaignar memorial was inaugurated by CM MK Stalin

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்; கைதானவர்கள் விவரங்கள் வெளியீடு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
worth 2 thousand crores incident details released

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவனாக ஜாபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது.