சேலம் சரகத்தில் கடந்த ஒரே மாதத்தில் அலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டே வாகனம் ஓட்டி வந்த 60 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வாகன விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து சமிக்ஞைகளை மீறுவது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலையில் வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசிக்கொண்டு செல்வது பல விபத்துகளுக்கு முக்கிய காரணியாக அமைவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வகையான விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீதும் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையான அபராதம், உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் மட்டுமின்றி,6 மாத காலத்திற்கு அவர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் ஓட்டுவோருக்கு 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
சேலம் சரகத்தில் கடந்த ஜனவரி மாதம் அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்றதாக 46 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் 30 பேர், சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச்சென்றதாக 23 பேர், போக்குவரத்து சமிக்ஞைகளை மீறியதாக 48 பேர் உள்ளிட்ட 221 பேரின் ஓட்டுநர் உரிமத்தை செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டிய 60 பேரின் ஓட்டுநர் உரிமத்தை மட்டும் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்பட்டவர்கள் வாகனத்தை இயக்குவது தெரிய வந்தால், அவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.