Advertisment

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லிப்ரா ப்ரொடக்ஷன்! 

LIBRA PRODUCTION STATEMENT TAMILNADU CHIEF MINISTER MKSTALIN

Advertisment

முக்கிய அரசியல் தலைவர்கள் பயணம் செல்லும் பாதைகளில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இத்தகைய பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதில் தொடங்கி பாதுகாப்பு பிரச்சனைவரை பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவதாக நீண்ட நாட்களாகவே கூறப்பட்டுவந்தது. சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் போலீஸ் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கலை மையப்படுத்தி சமீபத்தில் வெளியான 'மிக மிக அவசரம்' என்ற திரைப்படம் இது தொடர்பாக பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் பெண் போலீஸாரை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென்று பலரும் கருத்துத் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், சாலைகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்படுவதாகத் தமிழ்நாடு டி.ஜி.பி. திரிபாதி நேற்று முன்தினம் (13/06/2021) உத்தரவிட்டார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலைத் தொடர்ந்தே, இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. சாலை பாதுகாப்புப் பணிகளில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்களிக்கப்பட்டதைப் பாராட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, லிப்ரா ப்ரொடெக்ஷனின் ரவீந்தர் சந்திரசேகர் இன்று (15/06/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 2019ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தைக் காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும், சங்கடங்களையும் மனதிற்குள் ஏற்படுத்திக்கொண்டே ஓடியது. பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருந்தது படம். குறிப்பாக வி.ஐ.பி.க்களின் காவல் பணியில் கால்கடுக்க நிற்கும் பெண் காவலர்களின் அவசரத் தேவைகளை உணர்த்தும் காட்சிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. சிறு முதலீட்டில் பெரும் வலியைச் சொன்ன அந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் பலநாட்களாக நடந்துவருவதை அறிந்தோம். உடனே அப்படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உறுதி பூண்டோம்.

Advertisment

அதன்படியே அடுத்த சில மாதங்களில், அக்டோபர் 11ஆம் தேதி, அத்திரைப்படத்தை தமிழ்நாட்டு திரையரங்குகளில் எங்களின் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக விநியோகித்து வெளியிட்டோம். திரையரங்கில் படத்தை பார்த்தவர்களின் பாராட்டுக்கள் நெஞ்சம் நிறைத்தது என்றாலும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய கவனமும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வணிக ரீதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதைத் தாண்டி, மிக மிக அவசியமான ஒரு திரைப்படம் மக்களைச் சென்று சேரவில்லையே என்பதுதான் எங்கள் குழுவின் மிகப்பெரும் வருத்தமாக இருந்துவந்தது. இந்த நேரத்தில்தான் ஆக்சிஜன் போன்ற ஒரு அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வந்திருக்கிறது.

‘முதல்வர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்’ என்கிற மாண்புமிகு முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து அது காவல்துறை டி.ஜி.பி.யின்உத்தரவால் நடைமுறைக்கும் வந்திருக்கிறது என்கிற செய்தி, இந்தப் படம் சார்ந்து மனதில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.

எந்த வலியை ‘மிக மிக அவசரம்’ படம் பேசியதோ, அந்த வலியை ஏற்படுத்தும் சூழலையே மாற்றியமைத்திருக்கிறது முதல்வரின் இந்த உத்தரவு. நாம் தினந்தினம் காணும் ஒரு காட்சியில் நாம் உணராத ஒரு வலியைச் சொல்லி, அதை மாற்றமுடியாதா என்று ஏங்கிய எங்களுக்கு இதைவிட பெருமகிழ்ச்சி வேறென்ன இருந்துவிட முடியும்?

இந்நேரத்தில் இப்படியொரு கதையை எழுதிய ஜெகன்நாதையும், திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குநர் சுரேஷ் காமாட்சியையும் மனதார வாழ்த்துகிறேன். இப்படத்தை விநியோகித்ததற்கு லிப்ரா ப்ரொடக்ஷன் என்றென்றைக்கும் பெருமைகொள்ளும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நொடியில் இருந்து, சொல்லப்போனால் வெற்றிச் செய்தி வந்த நொடியில் இருந்தே, கரோனாவிற்கெதிரான பெரும்போரில் முன்களத்தில் நின்று சமரிட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். அவரது ஓயாத செயல்பாடுகளாலும், தொலைநோக்கு திட்டங்களாலும், அதிரடி அறிவிப்புகளாலும் மாற்றுக் கட்சியினரும் வாக்களிக்காதவர்களும் கூட வியந்து பாராட்டும் ஆட்சியை செயல்படுத்திவருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த அறிவிப்பு அவர் தனது ஆட்சிக்காலத்தில் இனி சூடப்போகும் மகுடங்களின் உச்சியில் வைரமாய் ஜொலிக்கும். ‘மிக மிக அவசரம்’ படக்குழுவின் சார்பாகவும், அனைத்து பெண் காவலர்களின் சார்பாகவும், லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகவும், முதல்வருக்கும், காவல்துறை டி.ஜி.பி.க்கும் எண்ணற்ற நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் மீதும், செந்தமிழின் மீதும் தனி அக்கறைகொண்டிருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இந்த நேரத்தில் சில கோரிக்கைகளையும் வைக்க விரும்புகிறேன்.

1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கலைஞர் அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.

2. கரோனா காலத்தில் திரையரங்குகள் இயங்காததால், அவற்றின் மின்சாரத் தொகை மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ திரையரங்க உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டுகிறேன்.

3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின்போது திரையரங்குகளை திறந்து, லட்சக்கணக்கான திரைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டுகிறேன்.

4. கரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.

5. பெரும் படங்கள், ஓடிடி தளங்கள் என பல போட்டிகளுக்கு மத்தியில் திரைக்கு வர சிரமப்படும் ‘மிக மிக அவசரம்’ போன்ற சமூக அக்கறை மிக்க திரைப்படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி திரையரங்குகளை அமைத்து, சிறு படங்களையும் படைப்பாளிகளையும் தயாரிப்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் நல்ல திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகவும் உதவிட வேண்டுகிறேன்.

வாக்குறுதியளித்த திட்டங்கள் மட்டுமல்லாது சொல்லாத திட்டங்களையும் அறிவித்து சிக்ஸர் அடிக்கும் உங்கள் ஆட்சியில், சோர்ந்து கிடக்கும் திரைப்பட உலகத்திற்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் புத்துணர்ச்சி பிறக்குமென்று மனதார நம்புகிறேன்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister Tamilnadu LIBRA PRODUCTION
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe