The letter written by the girl to the Chief Minister

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். இவர் திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்துவருகிறார். தொகுதி மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்.

Advertisment

இவரது தொகுதியில் உள்ள கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா(11). சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர், தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவருகிறார். அவரது தாய் கூலி வேலை செய்து சந்தியாவை காப்பாற்றி வருகிறார். சந்தியா அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

Advertisment

பள்ளிக்கு சென்று வருவதற்கு பெரும் சிரமமாக இருப்பதாக சிறுமி சந்தியா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். சிறுமியின் மனுவை படித்துப் பார்த்த முதலமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு அதை அனுப்பி மாணவிக்கு தேவையான உதவிகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து மாணவி சந்தியாவைச் சந்தித்த எம்.எல்.ஏ. கார்த்திகேயன், உடனடியாக அவருக்குத் தேவையான ஒரு லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் வாகனம் ஒன்றை வாங்கி அந்த மாணவியின் வீட்டுக்கே சென்று கொடுத்துள்ளார். இதைக்கண்டு மாணவி சந்தியாவும் மாணவியின் தாயாரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதோடு முதலமைச்சருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர். அவர்களிடம், மாணவியின் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அப்பகுதியில் உள்ள மேலும் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு லட்சத்தி 60 ஆயிரம் மதிப்புள்ள பெட்ரோல் மூலம் இயங்கும் ஸ்கூட்டர்களை தமது சொந்தச் செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். சமீபத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு விரைந்து சென்று தனது சொந்த நிதியிலிருந்து உதவி செய்துள்ளார். இவரது நடவடிக்கைகள் தொகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.