The letter was released and there was a stir

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஷ்வா (38). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வகையில், ஒரு வழக்கு தொடர்பாக விஷ்வாவை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் கடந்த சில நாட்களாகவே முயன்று வந்தனர்.

இதையடுத்து சுங்குவார் சத்திரம் அருகே ரவுடி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் சோகண்டி என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது பிடிபட்ட ரவுடி விஷ்வா தப்பிக்க, போலீசாரை தாக்கிய நிலையில் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் விஷ்வா உயிரிழந்தார். அதே சமயம் ரவுடி விஷ்வாவால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்தார். அதனைத்தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்கும் பணி தொடரும் என தெரிவித்தார்.

இதற்கிடையில் காவல் நிலையத்தில் விஸ்வா கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா” என போலீசார் கேட்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ள நிலையில், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், “என் மீது போலி என்கவுண்ட்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி காவல் ஆய்வாளர் தயாளன் தான் பொறுப்பு”என கடந்த 28 ஆம் தேதி எழுதியுள்ள புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் வெளியாகியுள்ள சம்பவம் காவல் துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.