ADVERTISEMENT

காவிரி உரிமையை போராடி மீட்போம்: தீக்குளிப்பில் யாரும் ஈடுபட வேண்டாம்! அன்புமணி

06:37 PM Apr 12, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் வசித்து வந்த பொம்மை பொருட்கள் விற்பனையாளர் பா.தர்மலிங்கம் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து பலியானார். இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை:

’’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீக்குளித்த ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்ற இளைஞர் மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்த துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. காவிரி மற்றும் நிட்யூட்ரினோ விவகாரத்தில் ஏற்கனவே இரு இளைஞர்கள் தங்களின் உயிர்களை தீக்கு இரையாய் கொடுத்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தில் பா.ம.க. சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டங்களின் போது திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி ரஞ்சித் என்ற என் தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளான். இத்துயரங்கள் போதாது என்று இப்போது தர்மலிங்கம் தீக்குளித்து இறந்த செய்தி மனதை வாட்டுகிறது. இனியும் இத்தகைய துயரங்களில் எவரும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பது உண்மை தான். அதற்கு எதிராக கடுமையாகப் போராடித் தான் காவிரி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமே தவிர, தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. இத்தகைய செயல்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பைம் ஏற்படுத்துமே தவிர, எந்தவிதமான உரிமைகளையும் பெற்றுத் தராது. எனவே, காவிரியில் நமது உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராட வேண்டும். மாறாக யாரும் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வேண்டுகிறேன்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT