Advertisment

"எங்களையும் வாழ விடுங்க சார்..."-சலூன் தொழிலாளர்களின் வேதனைக்குரல்! 

publive-image

கரோனா இரண்டாவது அலை தொடர் பரவலாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதாகக்கூறி அரசு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்து அது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல் நாளுக்கு நாள் மேலும் புதிய கட்டுப்பாடுகளையும் இந்த அரசு அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒன்று மாநகராட்சி, நகராட்சிப்பகுதியில் இயங்குகிற சலூன் கடைகள், பியூட்டி பார்லர் நிலையங்கள் திறக்கவே கூடாது. உடனே மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இது எங்கள் பிழைப்பில் நெருப்பை போட்டது போல் உள்ளது என பரிதவிக்கிறார்கள் முடி திருத்தும் தொழிலாளர்கள்.

Advertisment

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர் மற்றும் ஈரோடு மாவட்ட அழகுக் கலை பெண் நிபுணர்கள் சங்கத்தினர் அதன் நிர்வாகிகள் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் அவர்கள் கொண்டு வந்த மனுவை போட்டுவிட்டு நம்மிடம் கவலையோடு பேசினார்கள்.

Advertisment

"சார் சென்ற வருடம் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் நாங்கள் ஆறு மாத காலம் எங்களின் சலூன் கடைகள் திறக்க கூடாது என கட்டுப்பாடு போட்டு நாங்கள் பிழைப்பு நடத்தும் கடைகளை மூடி அடைத்து விட்டனர். அந்த ஆறு மாத காலம் வருவாய் இல்லாததோடு பூட்டிய கடைகளுக்கு வாடகையும், மின்சார கட்டணமும் வட்டிக்கு பணம் வாங்கி கட்டி இந்த அரசின் நடவடிக்கையால் நாங்கள் கடன்காரர்களாக மாறினோம். இதனால் தமிழகம் முழுக்க இந்த தொழிலை நம்பி இருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்தனர்.

publive-image

இதைவிட கொடுமை எங்களின் கஷ்டத்தை போக்குவதாகக்கூறி அரசு அறிவித்த இரண்டாயிரம் ரூபாய் நிவாரண உதவி கூட ஒரு சிலருக்கு மட்டும்தான் கிடைத்தது. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கரோனா வைரஸ் பாதிப்பை விட வறுமையும், கடனும் ஏற்பட்டதால் மாநிலம் முழுக்க எங்கள் தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துவிட்டனர். பல குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. நாங்கள் இப்போதும் பொருளாதார கஷ்டத்திலிருந்து மீளாமல் தான் உள்ளோம். இந்நிலையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இப்போது மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் இயங்கக்கூடிய சலூன் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்துவிட்டது. வேறு வழி இல்லாமல் கடையை மூடிவிட்டோம் ஏற்கனவே போதிய வருவாய் இல்லாமல் சமூகத்தில் மிகவும் பின்தங்கி போய் உள்ள எங்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் ஒரு பேரிடியாக எங்கள் தலையில் விழுந்து விட்டது. இதனால் மீண்டும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. நாங்கள் அன்றாடம் காய்ச்சிகள் என கூறப்படும் தொழிலாளர் குடும்பங்கள். மனிதர்களுக்கு முடி திருத்தம், சேவிங் என உழைத்து வாழ்பவர்கள். ஒவ்வொரு நாளும் எங்களின் உழைப்பின் மூலம் வரும் வருவாயால் தான் எங்களின் குடும்ப பசி போகிறது. எங்களையும் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களாக இந்த அரசு பார்க்க வேண்டும். சரி கடையை மூடிவிட்டோம் இனி எங்கள் குடும்பத்தின் பசிக்கு யார் உணவு என்கிற ஊதியத்தை கொடுப்பது? கடையை மூடச் சொன்ன அரசாங்கமும் அதன் அதிகாரிகளுக்கும் மாத சம்பளம் என்கிற பொருளாதார உத்தரவாதம் இருக்கிறது. எங்களுக்கும் எதுவும் இல்லை. இவர்கள்கரோனா வைரஸை விரட்டும் நடவடிக்கையை விட உழைத்து வாழும் எங்களைப் போன்ற அபலை தொழிலாளர்களின் அன்றாட வாழ்வை தான் விரட்டுகிறார்கள்.

அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இயங்கக்கூடிய சலூன் கடை களை மீண்டும் இயக்க கொடுக்க வேண்டும். நாங்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பணி செய்ய தயாராக இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் குறைந்த பட்சம் நேரக் கட்டுப்பாடுகள் விதித்து சலூன் கடை களை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்க வேண்டும். எங்கள் குடும்பங்களில் பட்டினி சாவு ஏற்படாமல் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும்" என பரிதாபமாக கூறினார்கள்.

இதேபோல் மாவட்ட அழகுக் கலை நிபுணர்களும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், மீண்டும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பியூட்டி பார்லர் கடைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என மனு கொடுத்து அரசாங்கத்திடம் சொல்லி எங்களையும் வாழ விடுங்க சார் என வேதனையோடு கூறினார்கள். தனி மனிதனுக்கு அவன் உழைப்பின் மூலம் வருகிற வருவாயை நிறுத்தும் இந்த உடலில்லாத அரசு தனக்கு வருகிற டாஸ்மாக் வருவாயை மட்டும் நிறுத்த மறுக்கிறது.

corona virus District Collector Erode saloon
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe