ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து செர்ல்லோபள்ளி செல்லும் சாலையில் கண் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று திடீரென சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது அவ்வழியாக பைக்கில் சென்றவர் மீது இந்த சிறுத்தை தாக்க முயன்றது. நல்வாய்ப்பாக அவர் மயிரிழையில் தப்பித்துச் சென்றார். அதே சமயம் அவருக்குப் பின்னால் வந்த காரில் இருந்த கேமிராவில் இது தொடர்பான காட்சிகள்  வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

Advertisment

இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் நடமாட்டம் குறித்துக் கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரக் காலமாகச்  சிறுத்தை  ஒன்று அந்த பகுதியில் சுற்றி வருகிறது. கடந்த வாரம் சாலையோரத்தில் அமர்ந்திருந்த நிலையில் அதனை அவ்வழியாகச் சென்ற ஒரு வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் அவ்வழியாக வழியாகச் சென்ற வாகன ஓட்டியைத் தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள  நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இரவு நேரங்களில் பைக்கில் தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.