இரயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தை தோல்; விழுப்புரத்தில் சிக்கியது எப்படி?

Leopard skin caught in train!

மேற்கு வங்காளத்தில் இருந்து கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை விழுப்புரம் ரயில்வே ஜங்ஷன் வந்து நின்றது. பொதுவாக இதுபோன்று வெகு தூரம் செல்லும் ரயில்களில் அவ்வப்போது ரயில்வே போலீசார் ஏரி சோதனை நடத்துவது வழக்கம். அது போன்று விழுப்புரம் ரயில்வே போலீசார் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது ரயில் என்ஜின் அருகில் இணைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. தமிழகத்தில் கஞ்சா கடத்தல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அது கஞ்சா மூட்டையாக இருக்கலாம் என்று எண்ணத்தில் போலீசார் பரபரப்புடன் அந்த மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்தனர். ஆனால், அந்த மூட்டைக்குள் சிறுத்தையின் தோல் ஒன்று இருந்தது. இதைக்கண்டு ரயில்வே போலீஸாரும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் அவர்கள் தாங்கள் யாரும் சாக்கு மூட்டை கொண்டு வரவில்லை தங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களுக்கும் இந்த மூட்டைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். சிறுத்தை தோலை கைப்பற்றி விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, அவர்களிடம் ரயிலில் கைப்பற்றிய சிறுத்தை தோலை ஒப்படைத்தனர்.

இந்த சிறுத்தை தோல் கடத்தப்பட்டது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த விழுப்புரம் ரயில்வே போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சிறுத்தை தோலின் மதிப்பு 5 லட்ச ரூபாய் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

police railway Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe