/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mayiladuthurai-leopard-art_1.jpg)
மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.
அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி,டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)