A leopard entered the farm!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சமீப காலமாக சிறுத்தை ஊருக்குள் புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.

Advertisment

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயி. இவர், தன்னுடைய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். தோட்டத்தில் உள்ள பட்டியில் அவற்றை வளர்த்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, செல்வகுமார் தோட்டத்தில் புகுந்து தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக் குட்டியைக் கடித்துக் கொன்றுள்ளது. நேற்று காலை வழக்கம் போல் செல்வகுமார் தோட்டத்திற்குச் சென்றபோது கன்றுக்குட்டி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதன் அருகே சிறுத்தை கால் தடம் பதிவாகி இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வனத்துறையினருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

Advertisment

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமானோர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். ஏற்கனவே இதேபோல் சிறுத்தை பலமுறை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. தற்போது மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக் குட்டியைக் கொன்றுள்ளது. இதனால் நாங்கள் பீதி அடைந்து உள்ளோம். தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடிவரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.