Skip to main content

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை; அச்சத்தில் பொதுமக்கள்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

leopard enter house viral video people shocked

 

சமீப காலங்களில் நீலகிரி மாவட்டம் அம்பிகாபுரம் பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரத்தில் வசித்து வரும் பொறியாளரான முருகன் என்பவருக்கு சொந்தமான பங்களா வீட்டில் கடந்த 7 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில், அந்த வீட்டில் இருந்த நாய் வழக்கத்தை விட அதிக அளவில் குரைத்துள்ளது. இந்தச் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து முருகனின் பங்களாவில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

அந்த சிசிடிவி கேமராவில், முருகனின் பங்களா வீட்டின் மாடிப் பகுதியில் சிறுத்தை ஒன்று நுழைந்து, அங்கிருந்த நாயை தாக்க முயன்று பங்களா முழுவதும் துரத்தி உள்ளது. சிறுத்தையின் பிடியில் சிக்காத வளர்ப்பு நாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதையடுத்து, வீட்டுக்குள் இருந்த சிறுத்தை அங்கிருந்து சென்றது அந்தக் காட்சியில் பதிவாகி உள்ளது.

 

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊருக்குள் உலாவி வரும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். குடியிருப்புப் பகுதியில் எவ்வித பயமும் இன்றி சாதாரணமாக உலா வந்த சிறுத்தையின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வனவிலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழப்பு; ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
3 people incident wild animal issue Rahul Gandhi consoled in person

வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  இந்த வன விலங்குகள் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை வயநாட்டில் வன விலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து வயநாடு பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று ஒருநாள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு வயநாடு தொகுதிக்கு திரும்பினார். இதனையடுத்து வயநாட்டில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்படி யானை தாக்கி உயிரிழந்த வனக்காவலர் அஜீஷின் என்பவர் வீட்டிற்கும், புலி தாக்கியதில் உயிரிழந்த பிரஜீஷின் வீட்டிற்கும், சுற்றுலா வழிகாட்டி பாலின் வீட்டிற்கும் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

Next Story

சாலையோரம் நடமாடும் 2 சிறுத்தைகளால் மக்கள் பீதி

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
People panic because of 2 leopards roaming along the road

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் யானை, சிறுத்தை, புலி வனப் பகுதிகளை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன.

சில சமயம் யானை தாக்குதல்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா வருவதைக் கண்ட பொதுமக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து ஊருக்குள் உலா வருவது சிறுத்தையா என கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் இரண்டு சிறுத்தைகள் உலா வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை வரும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து வீதி அடைந்த அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் இரண்டு சிறுத்தைகள் உலா வருவதுபோன்று வீடியோ வெளியாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்தப் பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.