Skip to main content

லெஜெண்ட் சரவணனுக்கு தனிச் சட்டமா? - கொந்தளிப்பில் சாமானியர்கள்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Legend Saravanan shooting in Kumbakonam.. public petition to district collector
                                                        கோப்புப் படம் 

 

சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையின் விளம்பரப் படங்களில் நடித்து வந்த அந்த கடையின் உரிமையாளர் 'லெஜெண்ட்' சரவணன், சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். அவரது தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஜோடியாக வட இந்திய மாடல் அழகி ரித்திகா திவாரி நடிக்கிறார். பிரபல சீனியர் நடிகர்-நடிகைகளான விஜயகுமார், பிரபு, லதா, சச்சு உள்ளிட்ட பலரும் இதில் இணைகிறார்கள்.

 

ஆரம்பக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இடையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. கரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால், மீண்டும் படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டன.

 

நிறுத்தி வைக்கப்பட்ட லெஜெண்ட் சரவணாவின் சினிமா படப்பிடிப்பு, வருகிற ஆகஸ்ட் 16- ந்தேதி திங்கட்கிழமை தொடங்கி அடுத்து வரும் மூன்று நாட்கள் கும்பகோணம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் சூட்டிங் நடக்கிறது. குறிப்பாக, திருவிழிமிழலை, திருவிடைமருதூர், உடையார்பாளையம், திருவாடுதுறை ஆகிய ஊர்களில் உள்ள திருக்கோவில்களில் சூட்டிங் நடத்தப்படவிருக்கிறது.

 

இந்த கோவில்களில் திருவிழா நடப்பது போலவும், ஹீரோவுக்கு பரிவட்டம் கட்டுவது போலவும், சாமி பிரகாரத்தை ஹீரோ சுற்றி வருவது போலவுமான காட்சிகள் ஷூட் பண்ணப்படவிருக்கிறது.  இதற்காக, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. சினிமா சூட்டிங்கிற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது குறித்து, அப்பகுதி மக்கள் சர்ச்சையைக் கிளப்புவதுடன், மாவட்ட ஆட்சியருக்கு புகாரும் அனுப்பியுள்ளனர். 

 

கரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கோவில்களில் கூட்டம் கூடுவது, சிறப்புப் பூஜைகள் நடத்துவது, சிறப்பு தரிசனம் செய்வது போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகள். 

 

இந்த நிலையில், கோவில்களில் சினிமா சூட்டிங் நடத்தினால் கூட்டம் அதிகரிக்கும். குறிப்பாக, சூட்டிங் நடக்கும் பகுதிகளில் உள்ள மக்களும், சூட்டிங்கை கேள்விப்பட்டு அருகாமையில் உள்ள கிராம மக்களும் சூட்டிங்கை வேடிக்கை பார்க்க வருவது அதிகரிக்கும். இதனால் தேவையற்ற கூட்டம் கூடுவது கரோனா பரவலுக்கு காரணமாக அமையும்.

 

சாமானியர்கள் சாமி கும்பிட கோவில்களில் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா சூட்டிங்கை மட்டும் கோவில்களில் நடத்த யார் அனுமதி கொடுத்தது? சினிமாகாரர்களுக்கென்றால் சட்டம் தன் கடமையைச் செய்யாதா? அனுமதி கேட்டதும் கொடுத்து விடுவதா? சினிமா மோகத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மறந்து இந்த அனுமதி தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது சினிமாக்காரர்கள் கொடுக்கும் அன்பளிப்புகளுக்கு மயங்கி அனுமதி தரப்பட்டிருக்க வேண்டும்.

 

கரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், எந்த வகையில் அனுமதி கொடுத்திருந்தாலும் தவறு. கோவில்களில் சாமானியர்களுக்கு ஒரு நீதி? சினிமாக்காரர்களுக்கு ஒரு நீதியா? என்று குமுறுகிறார்கள் அப்பகுதி மக்கள். இதுவே புகாராகவும் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.