
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 2 ஆம் தேதி 15 இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாவை ‘லேர்னர் சர்க்கிள்’ சார்பில் கொண்டாடப்பட்டது. 10 ஆயிரம் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பாற்றல், கற்பனை வளம் மற்றும் கதை சொல்லல் திறனை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விழாவாக இது அமைந்தது.
லேர்னர் சர்க்கிள் இதுவரை 125க்கும் மேற்பட்ட இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் புத்தக வெளியீட்டு விழா கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துபாயில் நடைபெற்றது. அங்கு 42 இளம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிட்டனர். குழந்தைகளின் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் விதமாக சென்னை உத்சவ் 2025 என்னும் இத்திட்டம் தொடர்கிறது.
இளம் எழுத்தாளர்களுக்கான உலகளாவிய எழுத்துப் போட்டி. இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதற்கான அதன் முயற்சியின் ஒரு பகுதியாக, லேர்னர் சர்க்கிளின் (Learner Circle) உலகெங்கிலும் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், “ரைட்டத்தான்” (Writathon) என்ற படைப்பு எழுத்துப் போட்டியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்வதாக லேர்னர் சர்க்கிள் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம் என்றும், போட்டியாளர்கள் கவிதை, சிறுகதை மற்றும் குறுநாவல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெற்றி பெறும் படைப்புகளுக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசு வழங்கப்படுவதோடு, குழந்தைகளை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கும் சிறந்த பள்ளிக்கான ஊக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது என்றும், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ‘ரைட்டத்தான்’ ஒரு பொன்னான வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.