
புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சுமார் 300க்கும் மேற்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலின் உடைமைகளை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்பொழுது கோவிலின் பதிவு அறையில் சுமார் 300க்கும் மேற்பட்ட பழங்கால ஓலைச்சுவடி கட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் கிரந்த எழுத்துக்களை கொண்ட 304 ஓலைச்சுவடிகளில் 25,543 ஏடுகள் உள்ளன. அதில் ராமநாதசாமி கோவில் தொடர்பான முக்கிய தகவல்கள் இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில் ஓலைச்சுவடிகள் கிடைத்த தகவல் இந்து அறநிலையத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் ஓலைச்சுவடிகளைப் படிக்கும் வல்லுநர்கள் 6 பேர் வரவழைக்கப்பட்டு அதனை படிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராமநாதசாமி கோவிலில் சுமார் 300க்கும் மேற்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.