
புதுச்சேரி வில்லியனூரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 21.05.2023 அன்று இரவு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரை வழங்கிய சம்பவம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க (தெற்கு) மாநில அமைப்பாளருமான இரா. சிவா சம்பந்தப்பட்ட நோயாளியுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி நகரத்திற்கு அடுத்த பெருநகரமாக விளங்கும் வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் மருத்துவ சேவைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி அவசரகதியில் திறக்கப்பட்டதாலும், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்துகள், ஆம்புலன்சிற்கு ஓட்டுநர் இல்லை போன்ற காரணங்களாலும் அம்மருத்துவமனை முழு செயல்பாட்டிற்கு வராமல் இருந்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் மருத்துவர்கள் சரியாக பணியில் இல்லாமல் நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும் சிலருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்புவதாகவும் கடந்த மாதம் புகார் எழுந்தது.
இதுகுறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துக் கூறியும் சுகாதாரத்துறை கவனத்தில் கொள்ளாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் 21.05.2023 இரவு வில்லியனூரைச் சேர்ந்த 23 வயதான மோகன்ராஜ் என்ற வாலிபர் காய்ச்சல் மற்றும் சளிக்காக மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். அந்த சீட்டுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அவர் மருந்து மாத்திரைகள் வாங்கி உள்ளார். ஆனால் மாத்திரையை பிரித்து பார்த்தபோது அவை கரும்புள்ளிகள் உடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அந்த வாலிபர் பணியில் இருந்த மருத்துவரை பார்த்து 'ஏன் மாத்திரைகள் இதுபோன்று இருக்கிறது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மருத்துவர் சரியாக பதில் அளிக்காததால் அந்த வாலிபர் நேற்று காலை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவாவிடம் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நோயாளியுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா அங்கு பணியில் இருந்த தலைமை மருத்துவர் திலகவதியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்தகத்தில் இருந்த மாத்திரைகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு பிரிவு மாத்திரைகள் கரும்புள்ளிகளுடன் இருந்தது. அவை தயாரிக்கும் போது நடந்திருக்கும் என்றும் அதனை திருப்பி அனுப்புவதாக மருத்துவர் தெரிவித்தார். தொடர்ந்து ஆய்வு செய்த சிவா தரமான மருந்து, மாத்திரைகள் வாங்கி நோயாளிகளுக்கு வழங்க மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.