
கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாச்சலத்தை தலைமையிடமாகக் கொண்டு, தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் கோரிக்கை, வெளியே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உடனடியாக விருத்தாச்சலம் மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி, விருத்தாச்சலம் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, ‘25 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அனைத்து துறைகளும் கொண்டுள்ள விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக உடனடியாக அறிவிக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.
மேலும் வருகின்ற 20-ஆம் தேதி விருத்தாச்சலத்தில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு, அனைத்து கட்சியினர், வணிகர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கும்வரை தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.