Skip to main content

வறுமையில் வழக்கறிஞர்கள்! மூடப்பட்ட கோர்ட் பாதுகாப்புக்கு மாதம் 6 கோடி ரூபாய்!

ரோனா அச்சத்தால் கடந்த 125 நாட்களுக்கு மேலாக நீதிமன்றம் மூடப்பட்டிருப்பதால், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2020 ஜூலை-24ந்தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுக்க நீதிமன்ற வாயிலில் போராட்டங்களை நடத்தியது ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்.

 

ll

 

அதன் மாநில செயலாளர் கு.பாரதியிடம் நாம் பேசியபோது, "தெலங்கானாவில் 25 கோடி ரூபாய், ஆந்திராவில் 15 கோடி ரூபாய் வழக்கறிஞர் மற்றும் குமாஸ்தாவின் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டிலோ நான்கு மாதங்களுக்குமேலாக எந்த ஒரு வருமானமும் இல்லாததால் இளநீர் வெட்டுவது, கூடைபின்னுவது, ஃபாஸ்ட்ஃபுட்டில் வேலை செய்வது என்கிற அளவுக்கு வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கறிஞர் அருள் என்பவர் தற்கொலையே செய்துவிட்டார். இதனையெல்லாம், கருத்தில் கொண்டுதான் 3 லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கவேண்டும், வழக்கறிஞர்களுக்கு மாதம் 15,000 ரூபாய், குமாஸ்தாக்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கவேண்டும் எனப் போராட்டம் நடத்தினோம். அவசியமே இல்லாத டாஸ்மாக் கடைகள் முதல் அத்தியாவசிய கடைகள்வரை திறந்திருக்கும்போது நீதிமன்றத்தை மட்டும் திறக்காதது ஏன்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

 

இதுகுறித்து, சென்னை வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான பால் கனகராஜ் நம்மிடம், "உயிர்பயம் என்பது எல்லா சூழல்களிலும் இருக்கும். அதற்காக, மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தையே அழிச்சுட்டு உயிர் வாழ்ந்து பிரயோஜனமில்ல. வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் ddசின்ன சின்ன வழக்குகளை சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக நடத்தலாமே தவிர, நெட்வொர்க் சிக்னல், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்களால் முழுமையாக நடத்த முடியாது. வழக்கறிஞர்கள் வேறு தொழில் செய்யவும் சட்டப்படி தடை இருக்கிறது. அதனால், யாருக்கு வழக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படட்டும். தெர்மல் ஸ்கேன் வைத்து பரிசோதித்து அனுமதிக்கலாம். தனிமனித இடைவெளியோடு வழக்காடலாம்.

 

 

டிசம்பர் வரை கரோனா பாதிப்பு தொடரும் என்கிறார்கள். அதுவரை நீதிமன்றத்தை திறக்கவில்லை என்றால் 1 லட்சம் வழக்கறிஞர்களில் வறுமையால் வெறும் 15,000 வழக்கறிஞர்கள்தான் மிஞ்சுவார்கள். அதனால், பாதுகாப்பு மற்றும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து நீதிமன்றங்களை உடனடியாக திறக்கவேண்டியது நீதித்துறையின் கடமை'' என்கிறார் அழுத்தமாக.

 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மோகனகிருஷ்ணிடம் நாம் கேட்ட போது, "பாதுகாப்பு வசதிகளை செய்துவிட்டு விரைவில் நீதிமன்றம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். பார்கவுன்சில் நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது'' என்றார்.

 

நீதிமன்றம் எப்போது திறக்கப்படும்? வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? என்று தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜிடம் நாம் கேட்டபோது, "நீதிமன்றங்களை திறக்கவேண்டும் என்று கடந்த மே மாதத்திலிருந்தே தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைப்பதோடு தீர்மானங்களையும் வைத்து தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பார்கவுன்சில் உறுப்பினர்கள் தலா 1 லட்ச ரூபாய் கொடுத்த நிதியின் அடிப்படையில் மே 20 -ந்தேதி 4,000 ரூபாய் வீதம் 12,500 வழக் கறிஞர்களுக்கு நிவாரண நிதி கொடுத்துள்ளோம். ஆனால், இது தீர்வல்ல என்பதால், ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலோடு தனிமனித இடைவெளியோடு பாதுகாப்பாக திறக்கலாம் என்று கோரிக்கை வைத்தபோது மதுரை உயர்நீதிமன்றம் உட்பட 29 மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களை தற்போது திறந்தார்கள். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் மட்டும் வீடியோ கான்ஃப்ரன் சிங்கில்தான் தொடரும் என்று சொல்லிவிட்டார்கள். இது, எங்களுக்கு பேரதிர்ச்சி.

 

மார்ச்-23 ந்தேதி ஊரடங்கு ஆரம்பித்ததும் ஏப்ரல் முதல் வாரத்திலேயே வழக்கறிஞர்களுக்கு மாதம் 20,000 ரூபாய் நிதியுதவி செய்யவேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கைவைத்து சட்டத்துறைச் செயலாளரிடம் நேரில் கோரிக்கை வைத்தேன். நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், 30 வயது இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என்று சமீபத்தில் 1,000 வழங்கறிஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

 

1 லட்சத்திலிருந்து 3 லட்ச ரூபாய்வரை வழக்கறிஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கு கடிதம் எழுதி போராடி வருகிறோம். ஆனால், எல்லாவற்றிற்குமே தீர்வு சென்னை உயர்நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்களை திறப்பது தான்'' என்கிறார் தீர்மானமாக.

 

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவனோ, "ஒன்று, நீதிமன்றங்களை திறந்திருக்கவேண்டும். இல்லை யென்றால், நீதிமன்றம் திறக்கும்வரை மாதம் 6 கோடி ரூபாய் செலவிடப்படும் சி.எஸ்.ஐ.எஃப். பாதுகாப்பு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விலக்கப்பட்டு அதற்கு, நான்கு மாதங்களாக செலவிடப்பட்ட கோடிக்கணக்கான நிதியை வறுமையில் வாடும் வழக்கறிஞர்களுக்கு கொடுத்திருக்கவேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்.

 

நீதிமன்றங்கள் திறக்கப்படவேண்டும் அல்லது அரசின் நிதித்துறை நிதியுதவி செய்ய வேண்டும்!