/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bnmnmnm_40.jpg)
ஆணவ படுகொலைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்பகை, உள்ளிட்ட வேறுபல காரணங்களால் நடக்கும் கொலைகளைவிட ஆணவ படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் நடந்த உடுமலைப்பேட்டை சங்கரின் படுகொலை ஒட்டுமொத்த சமுக ஆர்வலர்களின் மனதையும் கலங்கடித்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் சமுகத்தைச் சேர்ந்த இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015 ல் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பிறகு சங்கரும் கௌசல்யாவும் சங்கரின் வீடான உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலத்தில் வசித்துவந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கௌசல்யாவும் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சுற்றிவலைத்து இருவரையும் கத்தி, அரிவால் உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு வெட்டினார்கள்.
இதில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து போனார். தலையில் பலத்த காயமடைந்த கவுசல்யா குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை அங்கு புழக்கத்தில் இருந்த ஒட்டுமொத்த மக்களும் பார்த்து குலைநடுங்கி போனார்கள். அதோடு அங்கு உள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியிருந்ததை ஒட்டுமொத்த நாடும் தொலைக்காட்சி சமுக வலைத்தளங்கள்மூலம் பார்த்து அதிர்ந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fg_20_2.jpg)
அந்த கொலை வழக்கில் கௌசல்யாவின் பெற்றோர் சின்னசாமி, அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது . கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கானது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 12.12 .2017 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார் கலை தமிழ்வாணன் ,மதன் என்ற மைக்கேல் ஆகிய ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, கௌசல்யாவின் தாய் தனலட்சுமி, அவருடைய தாய் மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவனாக இருந்த பிரசன்னா ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். மற்றொரு குற்றவாளியான ஸ்டீபன்ராஜ் ஆயுள் தண்டனையும் மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. அதேபோல கௌசல்யாவின் தாய் தனலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது .
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அமர்வு இந்த வழக்குக்கான தீர்ப்பை ஜீன் 22 ம் தேதி வழங்கியது. அந்த தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமியின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். மேலும் ஐந்து குற்றவாளிகளின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டது. மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கால சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டது. கௌசல்யாவின் தாய் தனலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டது செல்லும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக அரசு இந்த தீர்ப்பின் மேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சொல்லியுள்ளனர்.
இந்தநிலையில் தான் ஆணவப் படுகொலை வழக்கில் சம்மந்தபட்டவர்கள் எளிமையாக விடுதலையாகிவிடுகின்றனர். அதற்காக தனி சட்டம்வேண்டும் என்கிற கோரிக்கை பலதரப்பிலும் எழுந்தபடியே இருக்கும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் ஆனவகொலைக்கு தனி சட்டம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது. வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம. சேயோன் கூறுகையில்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20200622-WA0228.jpg)
"உடுமலைபேட்டை சங்கர் என்கிற இளைஞரின் ஆணவ படுகொலை ஒட்டுமொத்த மனித சமுகத்தையும் திரும்பிபார்க்கவைத்தது. பட்டபகலில் மக்கள் அதிகம் புழக்கம் உள்ள இடத்தில் நடந்த ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது. முக்கிய குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை ஆராயும்போது உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அதற்கு சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டுமெனவும் கடந்த 2018 லேயே உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தடுக்கும் நடவடிக்கைகள் என்ற மூன்று தலைப்பில் வழிகாட்டும் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது .
அந்த தடுப்பு நடவடிக்கைகளில் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களை மாநில அரசுகள் கண்டறிந்து அந்த பகுதியின் காவல் அதிகாரிகளுக்கு அதுபற்றி விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும். அது போல நிவாரண நடவடிக்கைகளாக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் தம்பதியினர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லங்களை தொடங்க வேண்டும். கலப்பு திருமணங்கள் செய்து கொள்ள விரும்புவோர் திருமணம் நடைபெறுவதற்கு பாதுகாப்பை காவல்துறை தரவேண்டும் என்றும், தண்டனை நடவடிக்கைகளாக இந்த வழிகாட்டும் நெறிமுறைகளை காவல்துறையை சேர்ந்தவர்கள் மாவட்ட அதிகாரிகளும் பின்பற்றத் தவறினால் அவர்கள் மீது துறை ரீதியான தண்டனை எடுக்கப்பட்டு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வரை அமல்படுத்தப்படவில்லை. நடைமுறைப்படுத்தப்படவில்லை .
மேலும் இந்திய சட்ட ஆணையம் தயாரித்த ஆணவ கொலைகள் தொடர்பான சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய , மாநில அரசுகள் உடனே பின்பற்ற வேண்டும். மேலும் மத்திய அரசு உடனடியாக ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். அதில் ஈடுபடும் நபர்கள் மீது அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டும். மேலும் தமிழக அரசு உடனடியாக உடுமலை சங்கர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் தேவை," என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)