Skip to main content

"தனிமாவட்டமாக அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்" - வழக்கறிஞர் கூட்டமைப்பு

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் புறக்கணிக்க முன்வரவேண்டும், என்று வக்கீல்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ராமசேயோன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்துவருகிறது. சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செங்கல்பட்டு உள்ளிட்ட புதிய மாவட்டங்களை உருவாக்கியபோது, மயிலாடுதுறையில் போராட்டம் வலுப்பெற்றது.

இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்குள் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்காவிட்டால் மயிலாடுதுறை கோட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் தேர்தலை புறக்கணிப்போம், புறக்கணிக்க வேண்டும்," என்றனர்.

இதற்கு இடையில் நாகை மாவட்டத்தில் புதிதாக வரப்போகும் மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று போராட்டமாக மாறி வருகிறது.

இந்த சூழ்நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கபோவது உறுதி. மேலும், மருத்துவக்கல்லூரி மாவட்ட தலை நகரத்தில் தான் அமைக்க முடியும். மயிலாடுதுறை முதலில் மாவட்டம் ஆகட்டும் மருத்துவக்கல்லூரி தானாக அமையும் என்று கூறினார்.

lawyers association wants to boycott local body election


வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராமசேயோன் கூறுகையில், "தமிழகத்தில் குறிப்பாக நாகை மாவட்டத்தில் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே மயிலாடுதுறையை அதிமுக அரசு பார்த்து வருகிறது. இது  வேதனையின் உச்சம். இங்கு புதியபேருந்து நிலையம் இல்லை, பாதாளசாக்கடை குளறுபடியாகிவிட்டது, மயிலாடுதுறை நகராட்சி முழுமையாக முடங்கி கோமா நிலையில் உள்ளது. மக்கள் தொகையில் மயிலாடுதுறையை விட பலமடங்கு குறைவான பல மாவட்டங்களை புதிதாக உருவாக்கியிருக்கிறது. நீண்ட நாள் கோரிக்கை, பாரம்பரியமும், பண்பாடும் கொண்ட மயிலாடுதுறையை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை, திருவாடுதுறை, தருமபுரம் உள்ளிட்ட பிரதான ஆதீனங்களும் வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, மயூரநாதர் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்களும் மயிலாடுதுறை பகுதியில் தான் இருக்கிறது.


ஆனாலும் மாவட்டமாக அறிவிக்க ஏன் தயக்கம் என்று புரியவில்லை. இந்தநிலையில் நாகை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரியும் நாகப்பட்டினத்திற்கே கொண்டு செல்வது வேதனையின் உச்சம். அதனால் தான் உள்ளாட்சி தேர்தலை மக்கள், அரசியல் கட்சியினர் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை; காவலர் கைது!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Mayiladuthurai Dt Perambur Police Station constable Thirunavukarasu incident

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து சென்னையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.

இதனையடுத்து காவலர் திருநாவுகரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Lawyers against central govt demanding on rollback of laws

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்குப் பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3  குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று (10.07.2024) சிதம்பரம் ரயில் நிலையத்திற்குச் சென்று சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் செல்லும் சோழன் விரைவு ரயில் மறித்து மறியல் போராட்டம் செய்வதற்கு முயற்சித்தனர்.

அப்போது அவர்களை காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்காததால் அவர்கள் காவல்துறையின் தடையை மீறி நடைமேடை வரை சென்று சோழன் விரைவு ரயில் நடைமேடையில் நின்ற போது 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் வழக்கறிஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து விடுவித்தனர்.