வழக்கறிஞர் வேலுச்சாமி நெல்லையைச் சேர்ந்தவர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார். தீபாவளி விடுமுறைக்காக இவர் சொந்த ஊருக்குச் சென்றார். கடந்த 25- ஆம் தேதி தனது மகளை மருத்துவமனைக்கு டூ வீலரில் அழைத்துச் சென்றபோது ஹெல்மெட் அணியவில்லை. எஸ்.வி.சி. கல்லூரி அருகில் காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் வேலுச்சாமிக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால், அவரைக் கைது செய்து இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்து, மறுநாள் காலை சிவகிரி நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தியிருக்கின்றனர்.

Advertisment

lawyers and police friend madurai high court judge

இந்த வழக்கில் ஜாமின் கோரிய மனு விடுமுறைக்கால அமர்வில் அவசர மனுவாக விசாரிக்கப்பட்டு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தலைமைக் காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது, வழக்கறிஞரின் வாகனத்தை மதியம் 1 மணிக்குள்ளாக அவரது உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் மதியவேளையில் விசாரணைக்கு வந்தபோது, தலைமைக் காவலர்கள் இருவரும் மன்னிப்புக்கோரி கடிதம் எழுதி வழக்கறிஞரிடம் அளிக்கவும், தலா ரூ.1001-ஐ வரைவோலையாக எடுத்துக்கொடுக்கவும் உத்தரவிட்டார். அப்போது, வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையினர் தங்களின் சீருடை, லத்தி, துப்பாக்கி ஆகியவற்றை நன்மையான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தையும் நீதிபதி தெரிவித்தார்.