Skip to main content

“செல்போனை திருடிய களவாணி நீ!” இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வக்கீல்!

Published on 19/04/2018 | Edited on 19/04/2018
police



அருப்புக்கோட்டையில் அடுத்த பரபரப்பான சம்பவமாக, வீடியோ ஒன்று வெளிவந்திருக்கிறது. அதில் - “ஒரு அசால்ட் கேஸை எத்தனை நாள் விசாரிப்பீங்க? போலீஸ் ஸ்டேஷன்ல வக்கீல் ஆர்க்யூ பண்ணக்கூடாதா? வக்கீலுக்கு என்ன மரியாதை கொடுத்தீங்க? அய்யா சாமி.. உங்க கால்ல விழறேன் சாமின்னு கெஞ்சனுமா?” என்று வழக்கறிஞர் ராம்குமார், அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் அன்னராஜாவிடம் வாக்குவாதம் செய்கிறார்.

பிறகு பணிவு காட்டுவது போல உடலை வளைத்து, இன்ஸ்பெக்டரின் காலைத் தொட முற்படுகிறார். இதைப் பார்த்து இன்ஸ்பெக்டர் அன்னராஜா “நீங்க சூப்பரா நடிக்கிறீங்க” என்று கமென்ட் அடிக்கிறார். ஒருகட்டத்தில் ஒருமையில் பேசும் அளவுக்கு இருவரின் வாக்குவாதமும் முற்றுகிறது. அதிரடியாக ராம்குமார், இன்ஸ்பெக்டர் அன்னராஜாவைப் பார்த்து ‘களவாணி.. செல்போனைத் திருடிவிட்டாய்..” என்று முகத்துக்கு நேராகவே குற்றம் சாட்டுகிறார். தடித்த வார்த்தைகள், மிரட்டல் தொனியில் வெளிப்படுகின்றன.
 

police


பலரது முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்படுவதை அறிந்தும், அந்தக் காவல் நிலையத்தில் இத்தனை காரசாரமாக நடந்துகொள்கிறார்கள்.

விவகாரம் இதுதான் –

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷை, கோபு என்பவன் கொல்ல முயன்றதாக, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி, கைது செய்யப்படுகிறான். ரிமான்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கோபுவிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் அன்னராஜா, அவனது செல்போனைக் கைப்பற்றி, காவல்நிலையத்துக்கு எடுத்துச் செல்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட கோபுவின் வழக்கறிஞரான ராம்குமார், அந்த மொபைலை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனாலும், அவரது பேச்சு ஒருகட்டத்தில் எல்லை மீறிச்செல்கிறது.

‘காவல் நிலையத்துக்கு வந்து இன்ஸ்பெக்டருக்கே கொலை மிரட்டல் விடுகிறாயா?’ என்று அன்னராஜா சிலிர்க்கிறார். தற்போது, வழக்கறிஞர் ராம்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார் அசோசியேஷனில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்