/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ambulance-in_9.jpg)
சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை லட்சுமி நாராயணன் (21) மற்றும் ரோஹித்(22) எனும் இரு கல்லூரி மாணவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இவர்கள், பூந்தமல்லி ரயில் சந்திப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் இரண்டு மாணவர்களும் தூக்கி வீசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில், வாகனத்தை ஓட்டி வந்த லட்சுமி நாராயணன் எனும் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். மேலும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ரோஹித் எனும் மாணவருக்குப் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்து குறித்து அறிந்த கோயம்பேடு போக்குவரத்துக் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான லட்சுமி நாராயணன் எனும் மாணவரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரோஹித்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்துக் காவல்துறையினர், விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சி.சி.டி.வி. பதிவின் மூலம் விபத்தை ஏற்படுத்திய அந்த அடையாளம் தெரியாத வாகனம் கண்டறியப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பலியான லட்சுமி நாராயணன் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 4ம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)