K. Veeramani

சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களை சந்தித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

Advertisment

அப்போது, எச்.ராஜா நீதிமன்றம் குறித்து தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதில் அளித்த கி.வீரமணி, அவர் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவது இது முதன்முறையல்ல. எல்லோரையும் தரக்குறைவாகப் பேசுவதற்குப்பெயர்தான் எச்.இராஜா என்பது. இதுவரையில் பலமுறை அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையும், அரசும் சும்மா இருந்ததினுடைய விளைவு, அவர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்.

நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால், நீதிமன்றத்தையே மிகவும் தரக்குறைவாகப் பேசுவது, காவல்துறையை இன்னும் அசிங்கமாகப் பேசியிருக்கிறார் என்று அவர்மீது வழக்குப் பதிவு செய்துவிட்டோம் என்பது பயனளிக்காது.

Advertisment

ஏற்கெனவே ஒரு மாணவி, ‘‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக!’’ என்று உணர்ச்சிவயப்பட்டு எங்கோ ஓரிடத்தில் சொன்னதை, உலகம் முழுவதும் அதைப் பிரபலப்படுத்தி கைது செய்தார்கள். எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?

ஏற்கெனவே பெண் பத்திரிகை செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இன்னமும் வெளியில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான், சட்டம் - ஒழுங்கு தூங்கிக் கொண்டிருக்கின்றபொழுது, குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றபொழுது, இவர்களுக்கெல்லாம் அந்தத் துணிச்சல் ஏற்படுகிறது.

எப்படியென்றாலும், அதனுடைய விளைவுகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.

நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் மன்றம் அதற்கான தண்டனையை வழங்குவார்கள் என்றார்.