Skip to main content

சட்டம் ஒழுங்கு படுமோசம்: ஈரோட்டில் சாமி சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது. ஈரோடு, சிவகிரியில் சாமி சிலையை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகில் உள்ள பொன்காளியம்மன் கோவிலில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நுழைந்து சாமி சிலையை சுத்தியலால் அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 20,000 குடும்பங்களுக்கு மேல் தங்களது குலதெய்வமாக வழிபாடு செய்து வரும் கோவிலில் சாமி சிலையை உடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

 

- E.R.Eswaran -



இந்த சிலை உடைப்பு சம்பவத்தால் ஈரோடு மாவட்டம் முழுவதும் அசாதாரண சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு சிலரின் சொந்த ஆதாயத்திற்காக இருவேறு சமூகங்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்குவதற்கு மர்ம நபர்களை வைத்து திட்டமிட்டு சாமி சிலையை இரவில் உடைத்து இருக்கிறார்கள். சாமி சிலையை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 


 

 

தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை மற்றும் நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நகைக்கடையில் சுவரை துளையிட்டு சாதுரியமாக கொள்ளை அடிக்கும் சம்பவத்தையும் பார்த்தோம். தற்போது ஈரோட்டில் சாமி சிலை உடைப்பு நிகழ்வால் ஏற்பட்டிருக்கும் பதட்டமான நிலையை சரி செய்ய தமிழக அரசும், தமிழக முதலமைச்சர் அவர்களும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். 


 

 

இதுபோன்ற சாமி சிலை உடைப்பு நிகழ்வுகள் தொடர்ந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய கலவரம் வெடிக்கும். எனவே தமிழகம் முழுவதும் மோசமாகி கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு மீது தமிழக முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமையலரின் மகளை அழைக்கும் அமெரிக்க பல்கலை. நெகிழ்ந்த தலைமை நீதிபதி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
The chef's daughter who won the Chief Justice's praise for studying law abroad

டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் சமையல் செய்யும் ஊழியர் அஜய்குமார் சமல். இவரின் மகள் பிரக்யா (25). சட்டப்படிப்பு படித்த பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள இரண்டு முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள பிரபலமான கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்க முன்வந்திருக்கிறது. அதனையொட்டி, சட்டமேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரக்யாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திசூட் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் நேரில் வரவழைத்து பாராட்டினர். மேலும், பிரக்யாவுக்கும், அவரது குடும்பத்துக்கும், தலைமை நீதிபதி சந்திரசூட் சால்வை அணிவித்து கவுரவித்தார். 

இதனையடுத்து, அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தகங்களை பிரக்யாவுக்கு வழங்கினார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பிரக்யா தனது சொந்த உழைப்பால் இதனை சாதித்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும், அவருக்கு தேவைப்படும் அனைத்தையும் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். அவர் படிப்பை முடித்து மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் எதைச் செய்தாலும், சிறந்து விளங்குவார். மேலும், 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை மிக எளிதாகத் தன் தோளில் சுமந்து செல்வார்” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரக்யா, “எனது தந்தைக்கு  மகளாக இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியம் என்று நினைக்கிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்தே அவர் எனக்கு உதவியுள்ளார். மேலும் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை அவர் எப்போதும் பெறுவதை உறுதி செய்தார். நீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு மூலம், தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுவதை அனைவரும் பார்க்கலாம். அவர் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிப்பார். அவருடைய வார்த்தைகள் விலை மதிப்பற்றவை. அவர் தான் எனக்கு ரோல் மாடல்” என்று தெரிவித்தார். 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள் எப்போது அமல்? - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Notification issued by Central Govt for When will the new criminal laws come into force?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். அதன் பின்னர், அவை நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.