Laundry workers struggle in dindigul

Advertisment

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். சக்கம்பட்டி பகுதியில் இந்த நெசவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக சலவைத் தொழில் செய்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து வரும் வேட்டிகளை சலவை செய்து, பேக்கிங் செய்து சந்தைப்படுத்தி வருகின்றனர். சலவை செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் வேலை செய்து வருகின்றனர். இதற்காக இந்தப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சலவை பட்டறைகள் உள்ளன.

இந்த நிலையில், இந்த சலவை பட்டறைகளிலிருந்து வெளிவரும் கழிவு நீரால் மாசு ஏற்படுகிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் சலவை பட்டறைகள் செயல்பட நீதிமன்றம் தடை விதித்து, சலவை பட்டறைகளில் உள்ள மின்சார இணைப்பைத் துண்டித்தது. இதனால் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகச் சலவைத் தொழிலாளிகள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து சலவை தொழிலாளிகள் கூறுகையில், ‘சலவைப் பட்டறையிலிருந்து வெளிவரும் கழிவுநீரால் மாசு ஏற்படுவதில்லை. வீட்டில் துணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண வேதிப் பொருளைத்தான் பயன்படுத்தி வருகிறோம். எனவே சலவைப் பட்டறைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சலவைப் பட்டறைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சலவை பட்டறை தொழிலாளர்கள் இன்று முதல் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்கும் வரை கஞ்சித் தொட்டி போராட்டத்தைத் தொடரப் போவதாகச் சலவை தொழிலாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.