/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_122.jpg)
ரேஷன் அரிசி கடத்தலைத்தடுக்க உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்களுடன்வட்ட வழங்கல் அலுவலர், பொதுவிநியோகத்திட்ட பறக்கும்படை அலுவலர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு புழக்கத்திற்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் இருந்து அரிசி கடத்தப்படுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அரிசி வாங்காத அட்டைதாரர்களிடம் ஒப்புதல் பெற்றுரேஷன் கடை ஊழியர்களே அரிசி வாங்கியதாக ரசீது போட்டுஅதை வெளிச் சந்தையில் விற்று விடுவது பரவலாக நடக்கிறது.
மேலும், ரேஷன் அரிசி வாங்கும் பொதுமக்கள் அதை வெளிச் சந்தையில் கிலோ 2 முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்து விடுகின்றனர். அவர்களிடம் ரேஷன் அரிசி வாங்கும் வியாபாரிகள் அதை மாவாக அரைத்து சாலையோர உணவகங்கள், பலகாரக் கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். மேலும், கால்நடை தீவனத்திற்கும் விற்று விடுகின்றனர்.
இந்நிலையில், சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும்ரேஷன் அரிசி கடத்தியதாக 565 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சொல்கின்றனர். இவர்களில் 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கடத்திச் செல்ல முயன்ற 225 டன் ரேஷன்அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 283 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை நடத்திய சோதனையில் 505 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், ரேஷன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, சிறு லாரி, வேன் உள்பட மொத்தம் 169 வாகனங்களையும் பறிமுதல்செய்துள்ளனர். உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை தொடரும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)