Advertisment

லாரி ஸ்டிரைக்: ரூ.3000 கோடி வர்த்தகம் பாதிப்பு!; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும்!!

lo

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சரக்கு லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் குறைக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும் இந்தியா முழுவதும் காலவரையற்ற சரக்கு லாரிகள் ஸ்டிரைக் நேற்று முன் தினம் (ஜூலை 20, 2018) தொடங்கியது. 3வது நாளாக இன்றும் ஸ்டிரைக் தொடர்கிறது.

Advertisment

சேலம் மாவட்டத்தில் 35 ஆயிரம் சரக்கு லாரிகள் உள்பட தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் லாரிகள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் 68 லட்சம் சரக்கு லாரிகள் ஈடுபட்டுள்ளன. இரு நாள்களில் 90 சதவீத லாரிகள் ஓடவில்லை. வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்சென்ற லாரிகளும் நேற்றுஇரவுக்குள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி ய நிலையில், இன்றுமுதல் 100 சதவீத லாரி போக்குவரத்தும் அடியோடு முடங்கியது.

லாரி ஸ்டிரைக் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள், பருப்பு, சமையல் எண்ணெய், பழங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டனர். இன்னும் இரு நாள்களுக்கு மேல் லாரி ஸ்டிரைக் தொடரும்பட்சத்தில் அனைத்து அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலைகளும் 100 சதவீதம் வரை உயரும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு கொண்டு செல்லப்படுவதும், அதேபோல் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சரக்குக் கொண்டு வருவதற்குமான புக்கிங் சேவைகள் கடந்த 15ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது. அதனால் நாடு முழுவதுமே அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் உயரும் எனத்தெரிகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தனராஜ் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அதேநேரம் மாநில அரசிடமும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம். பெட்ரோல், டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும்.

வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் நின்று நின்று செல்லும்போது தினமும் 1.75 கோடி ரூபாய் டீசலும், மனித உழைப்பும் வீணாகிறது. இதற்காகத்தான் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளே இருக்கக்கூடாது என்கிறோம். ஆனாலும், அரசுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமாக சுங்கக்கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கிறோம்.

மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை திடீரென்று 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். இதையும் குறைக்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்திதான் இப்போது காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளோம்.

வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள்கூட மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க 3 மாதங்கள் அவகாசம் கேட்டார். காலவரையற்ற ஸ்டிரைக் நடத்துவது குறித்து மே 17ம் தேதியே பகிரங்கமாக அறிவித்து நோட்டீஸ் கொடுத்துவிட்டோம். இப்போதும் மத்திய அமைச்சர் கால அவகாசம் கேட்டால் எப்படி?

எங்கள் கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில், அடுத்தக்கட்டமாக டேங்கர் லாரிகளையும் ஸ்டிரைக்கில் ஈடுபடுத்துவோம். ஏற்கனவே அவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்,'' என்றார் தனராஜ்.

லாரிகளில் ஏற்றப்படும் சரக்கை உரிய இடத்தில் பத்திரமாக கொண்டு சென்று இறக்கி வைப்பது வரை கண்காணிக்கும் பணிகளை சரக்கு புக்கிங் ஏஜன்டுகள் மேற்கொள்கின்றனர். லாரியில் ஏற்றப்படும் சரக்கின் எடை மற்றும் பயண தூரத்திற்கு ஏற்ப, புக்கிங் ஏஜன்டுகள் கமிஷன் பெறுகின்றனர். லாரி ஸ்டிரைக்கால் புக்கிங் ஏஜன்டுகளுக்கும் வேலைவாய்ப்பு முற்றிலும் பறிபோயுள்ளது. இந்த தொழிலில், சேலம் மாவட்டத்தில் 273 புக்கிங் ஏஜன்டுகளும், மாநிலம் முழுவதும் 5643 புக்கிங் ஏஜன்டுகளும் உள்ளனர்.

log

இதுகுறித்து தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளன மாநிலத் தலைவர் ராஜவடிவேல் கூறுகையில், ''லாரி ஸ்டிரைக் தொடங்கியதில் இருந்து சரக்கு லோடிங் செய்வது முழுமையாக நின்று விட்டது. தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை லட்சம் லாரிகள் வட இந்தியாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச், மஞ்சள், பட்டாசு, தேங்காய், முட்டை, தானியங்கள், இரும்பு கட்டுமானப் பொருள்கள், ஜவுளி உள்ளிட்ட பொருள்கள் லோடு ஏற்றிச்செல்லப்படும். லாரி ஸ்டிரைக்கால் இந்த சரக்கு போக்குவரத்து தடை பட்டுள்ளது.

வடமாநிலங்களுக்கு லோடு ஏற்றுவதற்கு புக்கிங் செய்வதை கடந்த 15ம் தேதி முதல் நிறுத்தி விட்டோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு லோடு புக்கிங் செய்வது 18ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருவதால் சரக்குக்கு சரியான வாடகையை நிர்ணயிப்பதில் சிக்கல் உள்ளது. லாரி உரிமையாளர்கள் எங்களை நம்பித்தான் ஒப்படைக்கின்றனர். சரக்கு புக்கிங் தொழிலும் லாரி உரிமையாளர்களை சார்ந்தே இருக்கிறது. சரக்கு ஏற்றி, உரிய இடத்தில் சரக்கை கொண்டு சேர்ப்பது வரை எங்கள் பணி. லாரி ஸ்டிரைக்கால் எங்களுடைய தொழிலும் முடங்கி உள்ளது,'' என்றார்.

சரக்கு போக்குவரத்துத் தொழிலில் தமிழ்நாட்டில் மட்டும் லாரி டிரைவர், கிளீனர் மட்டுமின்றி சரக்கு ஏற்றி இறக்கும் சுமைப்பணி தொழிலாளர்கள், டயர் ரீட்ரேட் தொழிலாளர்கள், லாரி மெக்கானிக்குகள் என ஒரு கோடி குடும்பத்தினர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். லாரி ஸ்டிரைக் நீடிக்கும்பட்சத்தில் ஒரு கோடி குடும்பத்தினருக்கும் வருவாய் இழப்பும், வேலையிழப்பும் ஏற்படும் சூழலும் உள்ளது.

சரக்கு போக்குவரத்தைப் பொறுத்தவரை மற்ற மாநிங்களைக் காட்டிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதனால் இதுபோன்ற ஸ்டிரைக்கின்போது தமி-ழகத்திற்கு மற்ற மாநிலங்களைவிட இழப்பு மிகவும் அதிகம். லாரி உரிமையாளர்களுக்கு தினமும் வாடகையாக மட்டும் ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. அரசுக்கு நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது.

இப்போது நடந்து வரும் சரக்கு லாரிகள் ஸ்டிரைக் காரணமாக இந்த வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, இந்த இரு நாள்களில் மட்டும் 3000 கோடி ரூபாய்க்கு சரக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

lory strike
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe