large number of devotees participated Chariot at Rasa Temple

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தென்முகம் வெள்ளோடு கிராமத்தில் சாத்தந்தை பிரிவு மக்களின் குலதெய்வமான ராசா சுவாமி - நல்லமங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 1987-ம் ஆண்டு முதல்முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தற்போது 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. சாத்தந்தையினர் அருகே உள்ள கிராமங்களான உலகபுரம் கரை, கனகபுரம் கரை, தேவபுரம் கரை ஆகியவற்றை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினரின் குல தெய்வமாக இக்கோவில் திகழ்கிறது.

Advertisment

இந்தநிலையில் தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்றம் சார்பில் ராசா சுவாமி - நல்லமங்கையம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலையில் மூலவர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலச பூஜை நடந்தது. இதையடுத்து புதிய தேரின் கோபுரத்தில் கலசம் நிறுவப்பட்டது.

Advertisment

உற்சவ சாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நல்லமங்கையம்மன் உடனமர் ராசா சுவாமி புதிய தேரில் அமர வைக்கப்பட்டனர். அதன்பிறகு தேரோட்டம் தொடங்கியது. தேர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி நிலை வந்தடைந்தது. விழாவில் கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, கேரளா கவுமா பால்பண்ணை உரிமையாளர் மருதாச்சலம், திருப்பூரை சேர்ந்த சாமியப்பன், தங்கவேல், முன்னாள் எம் எல் ஏ.க்கள் குணசேகரன், கிட்டுசாமி மற்றும் தென்முகம் வெள்ளோடு மூன்று கரை சாத்தந்தை குல மக்கள் நல சங்க நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் உள்பட ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், கரூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் தலைவர் சி.முத்துசாமி, செயலாளர் என்.டி.கண்ணுசாமி, பொருளாளர் கே.டி.பொன்னுசாமி, துணைத் தலைவர் எல்.நடராஜன், துணைச் செயலாளர்கள் கே.திருமூர்த்தி, எஸ்.தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று மாலை 7 மணிக்கு தேர் இக்கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் என்றும், மற்ற நாட்களில் பக்தர்கள் விரும்பினால் உரிய கட்டணம் செலுத்தி மாலை 7 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கலாம் எனவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.