Skip to main content

“பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்...” - இ.பி.எஸ் வலியுறுத்தல்!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
“Laptop for school students...” - EPS emphasis

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளைத் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதில், “பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

“Laptop for school students...” - EPS emphasis

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிபில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே - லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, ஜெயலலிதா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் சாக்கு சொல்லப்போகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

சார்ந்த செய்திகள்