ADVERTISEMENT

20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு... சிக்கித் தவிக்கும் அடுக்கம் கிராம மக்கள்!

09:13 AM Oct 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்று சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 26, 27 தேதிகளில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள கடல் பகுதி, அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக அடுக்கம் நெடுஞ்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டுப் பல இடங்களில் சாலைகள் பெய்துள்ளதால் நகருக்குள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாகக் கொடைக்கானலில் இரவு நேரங்களில் மிகக் கனத்த மழை பொழிந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் புதிதாக அமைக்கப்பட்ட கொடைக்கானல் அடுக்கம்-பெரியகுளம் சாலை பகுதிகளில் அதிக வெள்ளோட்டம் ஏற்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அடுக்கம் செல்லும் வழியில் இரண்டு இடங்களிலும், அடுக்கத்தைத் தாண்டி 15க்கும் மேற்பட்ட இடங்களிலும் மண்சரிவும், சாலை பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அடுக்கம் கிராம மக்கள் பெரியகுளம் நகருக்கும் மற்றும் கொடைக்கானல் நகருக்கும் செல்ல முடியாமல் நடுவில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் இன்று காலை முதலே சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT