
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியில் வசித்துவருபவர்கள் பூபதி மற்றும் செல்வகுமார். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவரிடம் 1998ஆம் ஆண்டு அவருக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இந்த குத்தகை விவகாரத்திற்கு நிலத்தின் சொந்தக்காரரான சிவபாக்கியம் மற்றும் அவரது மகன் பிரபு இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுக்கு முன்பு நிலத்தின் உரிமையாளர் சிவபாக்கியம் உயிரிழந்தார். ஆனால், குத்தகையின்படி சகோதரர்கள் இருவரும் அந்நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். தற்போது பூபதி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் தங்களிடம் உள்ள நிலத்தைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்று பிரபுவிடம் கூற எங்களுக்கு பணத்தைத் திருப்பித் தாருங்கள் என்றும் கேட்டுள்ளனர். ஆனால், தங்களிடம் பணம் இல்லை என்று கூறிய பிரபு மற்றும் அவருடைய சகோதரர் பிரகாஷ் இருவரும் நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு விவசாயம் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால், கடந்த 4ஆம் தேதி பிரபு மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும், நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் வாழை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். இதனால் கோபமடைந்த பூபதி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில், வாழை மரங்களை வெட்டி அதில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தங்களிடம் உள்ள நிலத்தைத் திருப்பி கொடுத்து பணத்தைப் பெற்றுத் தருமாறும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரபு மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.