Skip to main content

நகைக்கடை அதிபரிடம் நில மோசடி; 2 ரவுடிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Land Fraud to Jeweler Shop Owner; Gundas on 2 people

 

சேலத்தில் நகைக்கடை அதிபரிடம் நில மோசடியில் ஈடுபட்ட ரவுடி உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

 

சேலத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். புதிய பேருந்து நிலையம் அருகே நகைக்கடை வைத்திருக்கிறார். இத்துடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியில் 7.25 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏகாம்பரம் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறார். இதையடுத்து  தன்னுடைய நிலத்தை விற்று கடனை அடைத்துவிட திட்டமிட்ட அவர், சேலம் கோரிமேட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரவுடியான பூபதி (36) என்பவரின் உதவியை நாடினார். 

 

பூபதியும் தனது புரமோட்டர்ஸ் நிறுவனம் மூலம் நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கான செலவாக ஏகாம்பரத்திற்குச் சொந்தமாக டி.பெருமாபாளையத்தில் உள்ள 10 ஏக்கர் நிலத்தை தன் பெயரில் கிரயம் செய்து கொண்டார். மேலும், வீராணத்தில் உள்ள நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து பலருக்கு விற்பனை செய்திருந்த பூபதி அதற்குரிய பணத்தை ஏகாம்பரத்திடம் தராமல் ஏமாற்றி வந்தார். 

 

இது தொடர்பான பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை ஏகாம்பரம் கேட்டபோது, அவரை பூபதியும் அவருடைய அண்ணன் பெரியசாமியும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். மேலும், கன்னங்குறிச்சி மற்றும் சேலம் கடைவீதியில் உள்ள சொத்துப் பத்திரங்களையும் பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஏகாம்பரம், அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் பூபதியைக் கைது செய்தனர். விசாரணையில் பூபதி ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

 

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதாக அவரை சேலம் மாநகரக் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பூபதி மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

 

Land Fraud to Jeweler Shop Owner; Gundas on 2 people

 

அதேபோல், சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் அருண் (30) என்ற ரவுடியையும் சேலம் மாநகரக் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இவர் நாமமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிந்தராஜ் கோயில் விழாக்குழுத் தலைவரான தங்கசெங்கோடன் என்பவரை கோயில் திருவிழா தொடர்பான முன்விரோதத்தில் அரிவாளால் வெட்ட முயன்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அருணை கைது செய்து சேலம் மத்தியச் சிறையில் அடைத்து இருந்தனர். 


ஏற்கனவே அருண் மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காவது முறையாக இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடிகள் பூபதி, அருண் ஆகிய இருவரும் நவ. 15ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணை நேரில் வழங்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்