
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது வஞ்சினபுரம். இந்த ஊரைச் சேர்ந்த முருகேசன், கலையரசன் ஆகிய இருவரும் உறவினர்கள். மேலும், இருவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குச் செல்லும் பாதை சம்பந்தமாக இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் பாதை சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கலையரசன் தம்பி சிலம்பரசன், முருகேசன் மகன் அருள்குமாரை சந்தித்து, "ஏன் பாதை பிரச்சனைக்காக எனது அண்ணன் கலையரசன், அண்ணி ஆகியோரிடம் தகராறு செய்கிறீர்கள்.
பாதை சம்பந்தமாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறீர்கள். காவல்துறை மூலம் சுமுகமாகப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டியதுதானே? மேலும் உங்களுக்குள் நடந்த சண்டையில் ஊரிலேயே இல்லாத என் மீதும் காவல் துறையில் புகார் அளித்துள்ளீர்கள். இது என்ன நியாயம்?" என்று கேட்டுள்ளார். இதனால் அருள்குமார் சிலம்பரசன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருள்குமார் சிலம்பரசனை தாக்கியுள்ளார். அந்த நேரத்தில் அதே ஊரைச் சேர்ந்த பிச்சை பிள்ளை என்பவர் அந்த வழியாக வந்துள்ளார். அவர் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுவதைப் பார்த்து பதட்டம் அடைந்து, "ஏன் உறவினர்களான உங்களுக்குள் வீண் சண்டை இதை இரு தரப்பினரும் பேசி தீர்த்துக் கொள்ளலாம்" என்று இருவருக்கும் இடையே புகுந்து சண்டையை விலக்கியுள்ளார்.
இதில் கோபமான அருள்குமார் அருகிலிருந்த மரக்கட்டையை எடுத்து பிச்சை பிள்ளையின் பின் மண்டையில் தாக்கியுள்ளார். இதில் பிச்சை பிள்ளை அதே இடத்தில் ரத்தம் பீரிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பிச்சை பிள்ளையை மீட்டு செந்துறையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் டி.எஸ்.பி மதன் செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உட்பட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த பிச்சை பிள்ளை உடலைக் கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சண்டையை விலக்கச் சென்றவர் கொலையான சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகேசன் அவரது மனைவி சிவமணி மகன் அருள்குமார் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.