திருச்சியில் லலிதா ஜுவல்லரி நகை கடையில் ரூபாய் 13 கோடி மதிப்புடைய தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் போலீசார் வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாநிலம் முழுக்க தங்கியுள்ள வட மாநிலத்தவர்களை சோதனையிட தொடங்கியுள்ளனர்.

Advertisment

lalitha jewellery

ஈரோடு மாவட்டத்தில் ஏறக்குறைய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதில் குறிப்பாக பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் குடும்பம் குடும்பமாக நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவை தவிர கட்டிடங்கள் கட்டுமான பணிகளிலும் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் டீக்கடை பானிபூரி வியாபாரமும் அவர்கள் செய்து வருகின்றனர்.

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் எந்த பகுதியில் அதிக அளவு வடமாநிலத்தவர்கள் வேலை செய்கிறார்களோ அந்த பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலர் நேரடியாக அங்கு சென்று அவர்கள் குறித்த முழு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Advertisment

இவை போக வடமாநிலத்தவர்களுக்கு வீடு கொடுத்த வீட்டு உரிமையாளர்கள் அவர்கள் குறித்த முழு விவரங்களையும் சேகரிக்கிறார்கள். அவர்களுடைய குடும்ப சூழ்நிலை, பின்னணி குறித்தும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். சந்தேகத்திற்கிடமானவர்களை தனியாக கணக்கெடுத்து அவர்களை காவல் நிலையம் வரவழைத்து விபரங்கள் பெறுகிறார்கள்.

லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பிறகு மாநிலம் முழுக்க வட மாநிலத்தவர்கள் மீது பிடியை இறுக்கியுள்ளது தமிழக காவல் துறை.