Skip to main content

ஊரடங்கில் பெரியவரிடம் பணம் கொள்ளை! அவ்வளவு பணம் இல்லீங்க... அலைக்கழிக்கும் போலீசார்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

கரோனா ஊரடங்கு காலத்தில் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து நாட்டுக்காக கடும் வெயிலிலும், இரவு கொசுக்கடியிலும் பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார். ஆனால் அந்தத் துறையைச் சேர்ந்த ஒரு சிலரோ இதனைப் பயன்படுத்தி வந்தவரை லாபம் என கொழிக்கின்றனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.  
 

lalgudi


திருச்சி லால்குடி மெயின்ரோட்டில் உள்ள பெரிய பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி வாசலில் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் இறுதி கால வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தார். வங்கி அதிகாரிகளுக்கு வங்கிக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று விட்டுவிட்டனர். 
 

lalkudi

 

தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலில் உலகமே தன்னைக் காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் வேளையில் அந்தப் பெரியவரும் உடல் சரியில்லாமல் சோர்ந்து போய் நடக்க முயாமல் இருந்தவரைப் பார்த்த அந்த வங்கியில் உள்ள அதிகாரி ஒருவர் இந்தப் பெரியவர் இப்படியே இங்கே இருந்தால் அவர் உயிருக்கு ஏதுவும் பிரச்சனை ஆகிவிடக்கூடாதே என லால்குடி போலிசுக்குத் தகவல் சொல்லி அவரை ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய்ச் சேருங்கள் என்று சொல்லியிக்கிறார். 
 

http://onelink.to/nknapp


சிறிது நேரத்தில் வந்த இரண்டு போலிஸ்கார்கள் அந்தப் பெரியவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது அந்த பெரியவர் வைத்திருந்த மூட்டையில் 2000 ரூபாய் தாள்கள் ஒரு கையில் பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு கட்டு பணம், அத்தோடு இரண்டு கையாலும் அள்ள முடியாத அளவுக்கு 10 ரூபாய் நோட்டுகள் கீழே சரியவும் இந்த பணத்தை பார்த்தவுடன் அந்த போலிஸ்காரர்களின் மூளையில் சபலபுத்தி வெளியே எட்டிபார்க்க ஆரம்பித்தது.  

பெரியவர் மயங்கிய நிலையில் இருந்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட போலிஸ்காரர்கள் அந்தப் பணத்தை அப்படியே எடுத்து கொண்டு அந்தப் பெரியவரை அப்படியே தூக்கி அங்கிருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தம் அருகே போட்டுவிட்டு 108-க்கு போன் செய்து, மயக்கமாகி ஒரு பெரியவர் படுத்துக் கிடக்கிறார் என்று தகவல் சொல்லி விட்டு மறைந்தனர்.  
 

lalkudi

 

போலீசாரின் இந்தச் செயல்களைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெரியவருக்கு தினமும் உதவி செய்யும் ஒருவர், நமக்குத் தகவல் அளித்தார். நாம் நடந்ததைக் கேட்டோம். 
 

உடைந்த குரலில் பேசிய அவர், சார்… அவர் பெயர் பிச்சை. ஆனா.. இலட்ச கணக்கில் பணம் வச்சிருப்பார் மூட்டையில். ஆனா அது யாருக்கும் தெரியாது. அவரு லால்குடி கோர்ட்டில் குமாஸ்தாவா இருந்தார். அங்குப் பக்கத்தில் உள்ள ஐயங்கார் கேக் கடை ஓனர், தன்னுடைய கட்டிடத்தில் மேலே உள்ள ரூம்களில் வாடகை வாங்கிக் கொடுங்கள். அதற்கு ஒரு ரூம் தரேன் வாட்ச்மேன் மாதிரி இருந்துக்கோங்கன்னு சொல்லி அங்கேயே  இவரைத் தங்க வைத்துவிட்டார். கால போக்கில் அவரால் மாடி மேல ஏற முடியாததால் அப்படியே அந்த இடத்தை விட்டுட்டு இந்த ஸ்டேட் வங்கி வாசலில் உட்கார ஆரம்பிச்சார். வங்கி அதிகாரியும் வங்கிக்கு பாதுகாப்பாக இருக்கட்டுமேன்னு அடைக்கலம் கொடுத்தனர். அவருக்கு அரசாங்கம் கொடுக்கும் முதியோர் பணம் மாதம் மாதம் நான் தான் வாங்கி கொடுப்பேன். அன்றைக்கு அந்தப் பெரியவரிடம் பணம் மட்டும் எப்படியும் ரூபாய் ஒன்றரை இலட்சத்திற்கு மேல் இருக்கும் பணம் எடுத்தவர்கள் பார்த்தால் அடையாளம் சொல்லக்கூடிய அளவில் இருந்த போலிஸ்காரர்கள் தான். ஆனால் நான் மட்டும் தனியே தூரத்தில் இருந்தால் எதையும் தட்டிக் கேட்க முடியவில்லை. இப்படி ஊரடங்கிலும் போலிஸ் மனசாட்சி இல்லாமல் கொள்ளையடிக்குமா? என்று நம்மிடம் புலம்பினார்.

மயக்கத்தில் இருந்து நினைவு திரும்பிய பெரியவர் பிச்சை, தன்னிடம் இருந்த சேமிப்பு பணத்தை கொள்ளையடிப்பட்டதைத் தெரிந்ததும் ஐய்யோ போச்சே என்னோட வங்கி பாஸ்புக், ஒன்றரை இலட்சம் பணம் போச்சு என புலம்ப ஆரம்பித்தார். இவரின் புலம்பலைக் கேட்ட சிலர் லால்குடி காவல்நிலையத்தில் இது குறித்து பேசிய போது, சார் அவ்வளவு எல்லாம் பணம் கிடையாது 35,000 ஆயிரம் தான் இருக்கும். அதை அவரோட வங்கி கணக்கில் டெபாசிட் பண்ணிடுறோம் என இன்னைக்கு நாளைக்கு என ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 

கொள்ளையடித்த பணம் திரும்பக் கிடைக்காத மன உளைச்சலில் உடல்நிலை மோசமாக அவரை ஆம்புலென்ஸ் மூலம் லால்குடி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் அந்த ஏரியா மக்கள்.  

தான் வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேர்த்த பணத்தையும் மக்களைக் காக்கும் இந்த போலிஸ் திருடியிருப்பது மனித சமூகத்தில் மனிதநேயம் எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. 


 

சார்ந்த செய்திகள்