Skip to main content

அங்கீகாரமற்ற பள்ளிகளுக்கு லட்ச ரூபாய் அபராதம்!- கல்வி அலுவலர் அதிரடி!

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
students


கல்வியை சேவையாக பார்க்காமல் பணம் கொழிக்கும் தொழிலாக பார்ப்பதால் தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் நூற்றுக்கணக்கில் பள்ளிகள் உள்ளன. அதிலும் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியை விட மழலையர் பள்ளிகள் தான் 90 சதவிதம் அங்கீகாரமில்லாமல் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுமக்களிடம் சேர்க்கைக்காக ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்குவது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அங்கீகாரமில்லாமல் செயல்படும் இது போன்ற பள்ளிகளை குறிவைத்து கல்வித்துறை களமிறங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியலை நீதிமன்றம் வெளியிடச் சொன்னதன் விளைவாக அதை கல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. பட்டியலை வெளியிடுவதோடு சரி. அதன்பின் அதை பல மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை. இதற்கு விதிவிலக்காக உள்ளது திருவண்ணாமலை மாவட்ட கல்வித்துறை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 மழலையர் பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் செயல்பட்டுவருவதாக கடந்த மே மாதம் 25ந்தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிக்கை வாயிலாக வெளிப்படையாக பள்ளிகளின் பெயர்களை அறிவித்து இந்த பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அதோடு, அங்கீகாரமற்ற பள்ளிகள் திறக்கக்கூடாது, சேர்க்கை நடத்தக்கூடாது என உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கீகாரமற்ற 18 மழலையர் பள்ளிகளில் 3 பள்ளிகள் மட்டும் திறந்து மாணவர் சேர்க்கை நடத்துவது, வகுப்பு நடத்துவதாக புகார்கள் கல்வித்துறை அலுவலகத்துக்கு இந்தவாரம் வந்தன. அதை உறுதி செய்துகொண்ட சிஇஓ ஜெயக்குமார், ஜவ்வாதுமலையில் உள்ள சின்னமயில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, வெம்பாக்கம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் இயங்கும் டி.எல்.ஏ முறை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா என்கிற பெயரில் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் மற்றும்  2011 பிரிவின் உத்தரவை மீறி செயல்படுத்தும் இந்த பள்ளிகளின் தாளாளருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனி பள்ளி திறந்திருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது விதிமுறைகளை மீறி பள்ளிகளை நடத்திய, நடத்தும் தாளாளர்களை அதிரவைத்துள்ளது. இவரைப்போன்ற அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகளால் தான் கல்வியில் முன்னேறி வருகிறது திருவண்ணாமலை மாவட்டம்.

சார்ந்த செய்திகள்