lake women child incident police investigation

Advertisment

சேலத்தில் இயற்கை உபாதைகளைக் கழிக்க ஏரிக்கரைக்குச் சென்றபோது, கால் இடறி ஏரியில் விழுந்து சிறுமி பலியானாள்.

சேலம் பள்ளப்பட்டி கோடிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு தீபிகா (10) என்ற பெண் குழந்தை உள்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். சிறுமி தீபிகா, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவந்தாள்.

செவ்வாய்க்கிழமை (21.12.2021) காலை 06.00 மணியளவில், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக சிறுமி வீட்டைவிட்டு வெளியே சென்றாள். நீண்ட நேரமாகியும் அவள் வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவரைத் தேடிச்சென்றனர்.

Advertisment

பள்ளப்பட்டி ஏரிக்கரையில் தீபிகா அணிந்து சென்ற செருப்பு கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஏரிப் பகுதியில் தேடினர். அப்போது ஏரிக்கரை ஓரத்தில் தீபிகா உடல் பாதியளவு நீரில் மூழ்கிய நிலையில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.மகளின் சடலத்தைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூராய்வுக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டது.

விசாரணையில், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குச் சென்றபோது, கால் இடறி ஏரிக்குள் விழுந்து சிறுமி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடந்துவருகிறது.