lady Florist finds lost jewelry

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வேலாங்குளம். இந்த ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி 36 வயதான ராஜகுமாரி. அவருக்கு சொந்தமான 5 பவுன் நகையை தங்களது குடும்பச் செலவிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் திருக்கோவிலூர் நகரிலுள்ள ஒரு அடகுக் கடையில் அடமானம் வைத்திருந்தார் ராஜகுமாரி.

Advertisment

தற்போது, விவசாய அறுவடை முடிந்து,மகசூல் விற்பனை செய்த பணத்தில், தான்அடமானம் வைத்த நகையை மீட்டுச்செல்வதற்காக நேற்று திருக்கோவிலூர் சென்றுள்ளார். தான் அடமானம் வைத்த நகைக்கடையில் பணத்தைக் கொடுத்துவிட்டு தனது 5 பவுன் நகையை வாங்கி கையில் வைத்திருந்த பர்ஸில் வைத்துள்ளார். அதை ஒரு ஒயர்கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு ஊருக்குச் செல்வதற்காக கடைவீதி வழியே பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

பஸ்டாண்டு வந்ததும்வைத்திருந்த ஒயர்கூடையில் ஐந்து சவரன் நகையைக் காணவில்லை. நகை, வரும் வழியில் தவறி விழுந்துவிட்டதாக எண்ணி பதறிப் போனார் ராஜகுமாரி. பின்னர், உடனே அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று, வரும் வழியில் தான் அடகுக் கடையில் மீட்டுக்கொண்டு வந்த நகையைக் காணவில்லை என்று கூறியுள்ளார். போலீசார் அவர் அடகுக் கடையில் இருந்து வந்த வழியே நகையைத் தேடிச் சென்றனர். அந்த வீதியில் அக்கம்பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் மற்றும் எதிரே நடந்து வந்தவர்கள் எனப் பலரிடமும் விசாரித்தபடியே சென்றனர். அப்போது அந்த வீதியில் ஒரு இடத்தில் பூக்கடை வைத்திருந்த 39 வயது சசிகலா என்பவர், போலீசார் விசாரித்ததைப் பார்த்ததும் வீதியில் கிடந்த பர்ஸைஎடுத்து வைத்திருந்ததை உடனே அவர் போலீசாரிடம் கொடுத்து, 'இதுதானா என்று பாருங்கள்!' எனக் கொடுத்துள்ளார்.

Advertisment

அதில், ராஜகுமாரியின் 5 பவுன் நகை பத்திரமாக இருந்தது. அப்போது பூக்கடை சசிகலா போலீசாரிடம், "இந்த பர்ஸ் என் கடை அருகே கீழே விழுந்து கிடந்தது. அதை தற்செயலாகப் பார்த்த நான் எடுத்தேன். அதில், நகை இருந்தது. அது யாருடையது என்பது குறித்து அந்த பர்ஸில்எந்த விவரமும் இல்லை. சரி தவறவிட்டவர்கள் தேடிவந்து கேட்டால் கொடுத்துவிடலாம் என்று எடுத்து வைத்திருந்தேன். நீங்கள் அதை தேடி வந்ததும் அதைக் கொடுத்துள்ளேன்" என்று கூறியுள்ளார். அவரின் நேர்மையைக் கண்டு வியந்துபோன போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் கையாலேயே நகையைத் தவறவிட்ட ராஜகுமாரியின் கையில் ஒப்படைக்கச் செய்தனர். பூக்கடை சசிகலாவின் நேர்மையை அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டினார்கள்.