Skip to main content

ஆக்சிஜன் மற்றும் இடப்பற்றாக்குறை: கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்!  

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

கரோனா இரண்டாவது அலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், தற்போது 4,528 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 953 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் கூட நோயாளிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 

 

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்காக 350 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 178 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஒரு படுக்கையில் இருவர் என ஒரே ஆக்சிஜனில் இருவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் படுக்கை பற்றாக்குறையால்  புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில், வெறும் தரையில் படுக்க வைக்கப்பட்டும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுபோல் ஆக்ஸிஜன் படுக்கை வசதி இல்லாததால் அவசர சிகிச்சை வார்டு முன்புள்ள வளாகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டரைப் பயன்படுத்தி திறந்த வெளியிலேயே சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதில் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் சில நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், "கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 168 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியுள்ளது. அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிய நிலையில், கூடுதலாக 18 படுக்கைககள் தயார் செய்யப்பட்டது. அதுவும் மேல் சிகிச்சைக்காக அவர்களை வெளியில் அமர வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக சுமார் 160 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. முதற்கட்டமாக 60 ஆக்சிஜன் படுக்கைகளும் நோயாளிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். தினசரி ஏராளமானோர் பாதிக்கப்படுவதால் பெரும் பிரச்சினையாக உள்ளது"  என்கின்றனர். 

 

இதனிடையே, " சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று உள்ளவர்கள் சுய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். உடனே அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களது உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் பெரும்பாலானோர் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருந்துகொண்டே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். கடைசியாக ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு வரும்போது அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. எனவே ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கும் குறைவாக இருந்தால், அவர்கள் கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் சேர வேண்டும். 90, 94 இருப்பவர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும். 94-க்கு மேல் இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் சென்று முழுமையாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்"  என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்