/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pdu-ins-art.jpg)
தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரகக்கணக்கானோர் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளிகளாக குடும்பம் குடும்பமாக செல்கின்றனர். அன்றாடம் உழைப்பில் கிடைக்கும் வருவாயை அன்றே செலவு செய்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் கல்வியின் அருமையும் அறியாததால் தங்கள் குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்பாமல் தங்களுடனே வேலை செய்யும் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் இந்த மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவே தெரியாமல் உள்ளனர். இதிலும் கொஞ்சம் விபரமான ஆட்கள் இது போன்ற உழைக்கும் குடும்பங்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வரும் அவலநிலையும் உள்ளது.
இதே போல, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது கரும்பு அறுவடை நடக்கிறது. இதில் கீரமங்கலம் மேற்கு பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் விழுப்புரம் மாவட்டததைச் சேர்ந்த பலர் குடும்பமாக வந்து தங்கி இருந்து கரும்பு வெட்டியுள்ளனர். அதில் ஒரு குடும்பம் சரவணன் (வயது 35), அவரது மனைவி சங்கீதா (வயது 30), இவர்களது குழந்தைகள் ரித்திகா (வயது 5), பூமிநாதன் (வயது 3). இவர்கள் வேலை செய்த தோட்டத்தில் நேற்றுடன் (04.04.2025) கரும்பு வெட்டும் பணி முடிந்துவிட்டது.
அதனால் அடுத்த தோட்டத்திற்கு எங்கே செல்ல வேண்டும் என்று சர்க்கரை ஆலை சூப்பர்வைசரிடம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இன்று (05.04.2025) கீரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் சரவணன் குடும்பத்தினர் மற்றும் சிலர் வந்து தங்கி இருந்துள்ளனர். இதில் சரவணன் உள்ளிட்ட ஆண்கள் மது குடித்து அதிக போதையில் தள்ளாடியுள்ளனர். மாலை நேரத்தில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில் குளக்கரையில் நீண்ட நேரம் இருந்தவர்கள் மது போதை குறைவதற்குள் கூலித் தொழிலாளி சரவணன் குளத்திற்குள் வேகமாக இறங்கியதோடு போதை அதிகமாக இருந்ததால் வெளியே வரமுடியாமல் தன் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் முன்பே தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த சரவணின் மனைவி சங்கீதா கூச்சல் போட்டதால் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் குளத்திற்குள் இறங்கி சரவணனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது தண்ணீரை குடித்து இறந்துவிட்டார்.
கணவன் சரவணன் சடலம் அருகே பச்சிளங்குழந்தைகளை வைத்துக் கொண்டு மனைவி சங்கீதாவின் கதறல் அனைவரையும் கலங்க வைத்தது. தன் தந்தை இறந்து கிடப்பதைக் கூட அறிய முடியாத பிஞ்சுக் குழந்தைகள் தந்தையின் தலையருகே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது வேதனையாக இருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலிசார் சரவணன் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்றுப் பிழைப்பிற்காக தங்கள் குழந்தைகளைக் கூட படிக்க வைக்காமல் எங்கிருந்தோ வந்து மது போதையால் இப்படி உயிரிழந்துவிட்டார். இனி இந்த 2 பிஞ்சுக்குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த இளம் பெண் எப்படி வாழ்வது. தன் துணை தங்களைவிட்டு போய்விட்டாரே என்று எதிரே நிற்கும் சிவன் சிலையிடம், ‘உன்னை நம்பி வந்த எங்களை இப்படி பலி வாங்கிட்டியே.. இனி இந்தப் புள்ளைகளை எப்படி வளர்ப்பேன்’ என்று மனைவி சங்கீதா கதறி அழுதது கண்கலங்க வைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)