
சேலத்தில், மருத்துவர்களின் அலட்சியத்தால் குடலில் வெட்டு ஏற்பட்டு மனைவி உயிரிழந்து விட்டதாகக் கூலித் தொழிலாளி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
சேலம் கன்னங்குறிச்சி 10வது கோட்டம் சாந்தப்பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா (34). இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரேமா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. பிரசவத்திற்குப் பிறகு மே 5ம் தேதி வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு திடீரென்று வயிற்று வலி அதிகமானது. இதனால் மே 14ம் தேதி, அதே மருத்துவமனையில் பிரேமாவை சேர்த்தனர். ஸ்கேன் பரிசோதனையில், அவருடைய குடலில் துளை இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மே 16ம் தேதி பிரேமா உயிரிழந்தார். சிகிச்சை செலவில் பாதி கட்டணத்தைச் செலுத்திவிட்டு, பிரேமாவின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இது ஒருபுறம் இருக்க, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் தன் மனைவி இறந்துவிட்டதாக பாலகிருஷ்ணன், சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த பாலகிருஷ்ணன் தனது பச்சிளம் இரட்டை ஆண் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மே 24ம் தேதி வந்தார். அப்போது அவர் கூறுகையில், ''தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் குடலில் வெட்டு ஏற்பட்டு, மனைவி இறந்துவிட்டார். தற்போது 2 குழந்தைகளையும் வளர்க்க முடியாத நிலை உள்ளது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதி உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்'' என்று கண்ணீர் மல்கக் கூறினார்.