Advertisment

தமிழக சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும்: கி.வீரமணி பேட்டி

Gaja puyal visit

மீனவர்கள் பிரச்சனை, உப்பளத் தொழில் அறவே நாசம் என கஜா புயலால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஒரு சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையை உடனே கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

Advertisment

நாகை மாவட்டம், புஷ்பவனத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இரண்டாவது நாளாக இன்றைக்கு விக்கிரவாண்டியம் பகுதிகள், திருவாரூர், நாகை மாவட்டம் மற்ற பகுதிகளுக் கெல்லாம் சென்று, காலையில் தொடங்கி மாலையில் வரையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னோம்.

Advertisment

நேற்று பேராவூரணி, வடசேரி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் சென்றோம். அங்கே ஏராளமான தென்னை மரங்களும், மற்ற மரங்களும் வேரோடு வீழ்ந்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக ஆக்கக்கூடிய அளவிற்குக் கொடுமைகள் நடந்துள்ளன என்பது ஒரு பக்கம்.

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியினுடைய வேதாரண்யம் பகுதிக்கு வரும்பொழுது, ஏராளமான மரங்கள் வீழ்ந்து, வீடுகளை இழந்து, உணவுக்கு வழியில்லாமல், ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறவர்களுக்கு உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால், அதேநேரத்தில், கோடியக்கரை, கோடியக்காடு பகுதிகளுக்கு வரும்பொழுது, அங்கே உப்பளம் தொழில் என்பது ஒரு முக்கியமான தொழிலாகும். அந்த வகையில், கடல் உள்வாங்கி, அங்கே கடல் நீர் கலந்து, கடல் துறையில் இருக்கக்கூடியவை எல்லாம் கூட உள்ளே வரக்கூடிய அளவிற்கு ஆகி, அதனுடைய விளைவுகள் அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சாரக் கம்பங்கள் எல்லாம் வீழ்ந்தது என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அங்கே உப்பளத் தொழிலே பாதிக்கக்கூடிய அளவிற்கு, இனிமேல் உப்பே மிகப்பெரிய அளவிற்கு அரிதான பொருளாகும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உள்ளது.

அந்தத் தொழிலை நம்பி, பல ஊர்களில் இருந்து வந்து வேதாரண்யத்தில் தங்கியிருக்கக்கூடிய தொழிலாளர்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். அந்தத் தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

இந்தப் பகுதியான புஷ்பவனம் பகுதிக்கு வந்தபொழுது, ஏராளமான மரங்கள் வீழ்ந்திருக்கின்றன, வீடுகள் சேதமடைந்திருக்கின்றன என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், இன்னொரு கொடுமையான ஒரு செய்தி என்னவென்றால், கஜா புயலுக்கு முதல் நாள் கடல் உள்வாங்கி, அமைதியாக இருந்திருக்கிறது. பிறகு திடீரென்று கஜா புயல் அங்கேதான் தொடக்கமாயிருக்கிறது. அந்தப் பகுதியின் அருகே நின்று நாங்கள் பார்த்தபொழுது, மூன்று அடி உயரத்திற்கு சேறு உயர்ந்து, அதேநேரத்தில் அப்படி உயர்ந்த சேறு, புஷ்பவனம் தெருக்கள் வரையில் படகுகளைத் தள்ளிக் கொண்டு வந்து, எங்கே பார்த்தாலும் சேறு மயமாக இருக்கிறது.

இன்னும்கூட கடல் அலைகளை உற்றுப் பார்த்த நேரத்தில், இயல்பான வண்ணத்தில் இல்லை. மீண்டும் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு - புயல் முடிந்தது, அமைதி திரும்பியது - நாங்கள் மீன்பிடிக்கச் செல்கிறோம் என்று சொல்லக்கூடிய நிலையில் இல்லை. அவர்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருக் கிறது. உப்பளத் தொழிலாளர்களுக்கும் ஏராளமான சங்க டங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, எல்லாத் துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய - மாநில அரசுகள் இதில் போதிய கவனத்தை செலுத்தவேண்டும். நிவாரணப் பணிகளைப் பார்க்க வந்தவர்கள் இந்தக் கோணத்திலும் பார்க்கவேண்டும்; இதற்கும் நிதி உதவிகளை தாராளமாக செய்யவேண்டிய - வற்புறுத்தவேண்டியது அவசியம்.

k.veeramani

சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டுக!

அந்த வகையில், உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.

அதில் குறிப்பாக, மீனவர்கள், விவசாயிகள், உப்பளத் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு வர, அவர்கள் மறுவாழ்வு பெற, வாழ்வாதாரத்தைப் பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று நினைத்து, நம்பிக்கையற்று மனம் நொந்து போய் அம்மக்கள் இருக்கிறார்கள்.

எனவே, கஜா புயலின் தாக்கம் எல்லாருடைய மனநிலையைக் குலைத்திருக்கிறது; வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஆனால், இதுவரையிலும், பிரதமர் ஒரு இரங்கல்கூட சொல்லவில்லை. உடனடியாக மாநில அரசு கேட்கின்ற நிதிக்கு மேலாகவே மத்திய அரசு கொடுக்கவேண்டும்.

இங்கே ஒரு தேசிய பேரிடர் நடந்திருக்கிறது. எல்லா தரப்பு மக்களையும் இப்புயல் பாதித்திருக்கிறது. விவசாயம் செய்யக்கூடிய மக்கள் மட்டுமல்ல, தென்னை வளர்த்தவர்கள் மட்டுமல்ல - ஏற்கெனவே காவிரி டெல்டா பகுதியைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு நீர் கிடைக்கவில்லை என்பதற்காக, குறுவை சாகுபடியை, சம்பா சாகுபடிகளைக் கைவிட்டு, தென்னை சாகுபடிகளை நம்பினார்கள். இன்றைக்கு அந்தத் தென்னையும் பல ஆண்டுகளாகப் பலன் கொடுத்தவை வேரோடு சாய்ந்ததின் காரணமாக, அம்மக்கள் கண்ணீர்க் கடலில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.

தன்னம்பிக்கையை விதைத்துவிட்டு வந்திருக்கிறோம்!

இதற்கு உடனடி நிவாரணம் தேவை. தன்னம்பிக் கையை இழந்துவிடாதீர்கள். உங்களுக்கு உதவுவதற்கு அரசு ஒரு பக்கம் இருந்தாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மனிதநேயம் மிக்கவர்களும், மற்றவர் களும் உதவுகிறார்கள்; தைரியமாக இருங்கள் என்று அவர்களுக்குத் தன்னம்பிக்கையை விதைத்துவிட்டு வந்திருக்கின்றோம்.

ஆகவே, இதில் கட்சி வேறுபாடில்லாமல், அரசியல் பார்வையில்லாமல், கவுரவம் பார்க்காமல், உடனடியாக சட்டமன்றத்தை தமிழக அரசு கூட்டவேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டவேண்டும்.

இன்னுங்கேட்டால், ,பாதிக்கப்பட்டவர்கள், வாழ்விழந்த வர்களின் கருத்துகளை கேட்டு, மறுபடியும் இன்னொரு தொகையை மத்திய அரசிடம் கேட்கவேண்டும். மத்திய அரசை வற்புறுத்தவேண்டும்.

மத்திய அரசு என்பது

எல்லா மக்களுக்காகத்தான்!

மத்திய அரசு என்பது எல்லா மக்களுக்காகவும்தான். அது வடக்கே இருக்கின்ற மக்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டை நீக்கி விட்டு அவர்கள் பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால், அதனுடைய விளைவு என்னாகும் என்று அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, இதை உடனடியாகக் கவனிக்கவேண்டியது அவர்களுடைய முக்கியமான கடமை.

இந்த சூழ்நிலையில், வெந்த புண்ணில் வேலை சொருகுவதைப்போல, மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் மின் சாரத்திற்கே தட்டுப்பாடு இருக்கின்ற நேரத்தில், மேட்டூர் மின்சாரத்தைக் கூட தடுக்கக்கூட வாய்ப்புகள் இதன்மூலம் செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கவேண்டியது மானமுள்ள தமிழருடைய கடமை -

மனிதநேயக் கடமை

எனவே, இத்தகைய சூழ்நிலையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவது அனைவருடைய கடமையாகும்.

தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கவேண்டியது ஒவ்வொரு உரிமையுள்ள, மானமுள்ள தமிழருடைய கடமை - மனிதநேயக் கடமை என்பதைக் கூறுகிறோம்.

எதிர்மறையாக சொல்லக்கூடாது

செய்தியாளர்: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை, மின்சாரம் இன்னும் அங்கே வரவில்லையே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

கி.வீரமணி : நிவாரணப் பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்மறையாக சொல்லக் கூடாது. இருக்கிற நிலவரப்படி அங்கே என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

எல்லா சட்ட திட்டங்களுக்கும் விதிவிலக்குகள் உண்டு!'

செய்தியாளர்: தலைஞாயிறு, உம்பளச்சேரி போன்ற பகுதிகளுக்கு நிவாரணப் பணிகள் போய்ச் சேரவில்லை; அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறார்களே?

கி.வீரமணி : தலைஞாயிறு போன்ற மற்ற பகுதிகளுக்குச் சென்றபொழுது, நிவாரணப் பணிகள் சரிவர வரவில்லை. அப்புறப்படுத்த வேண்டியவைகளை அப்புறப்படுத்தவில்லை. உதவிகள், நிவாரணங்கள் வந்து சேரவில்லை. எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பாக காலனியில் இருக்கும் மக்கள் முதற்கொண்டு, பல்வேறு தெருக்களில் இருக்கின்றவர்கள் சொன்னார்கள். எல்லா இடங்களுக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கவேண்டும்.

அதைவிட மிக முக்கியமான ஒன்று, பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 30 ஆம் தேதிதான் கடைசி நாள் என்று சொல்லி, எல்லா இடங்களிலும் கூட்டம் கூட்டமாக விவசாயிகள் நிற்கிறார்கள். பல இடங்களில் கிராம நல அதிகாரிகள் இல்லை. ஆகவே, பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும்.

இங்கேதான் புயல் அடித்திருக்கிறது; எல்லா சட்ட திட்டங்களுக்கும் விதிவிலக்குகள் உண்டு. அதேபோன்று பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கும் விதிவிலக்கு வரவேண்டும். இது பொதுமக்களின் மிகப்பெரிய கோரிக் கையாகும். இதில் மாநில அரசு வேகத்தோடும், விவேகத்தோடும் நடந்துகொள்ளவேண்டும். இதற்காக மத்திய அரசை வற்புறுத்தி, பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒரு மாதமோ, இரண்டு மாதமோ கால அவகாசத்தைக் கொடுத்தாகவேண்டும்.

மாநில அரசு உடனடியாக செய்யவேண்டும்

கஜா புயலின் பாதிப்பினால் வீடு இல்லாமல், உணவு இல்லாமல், தெருவில் நிற்கிறார்கள் மக்கள். முகாம்களிலும் தங்கியிருக்கிறார்கள்.

அவர்களிடம் சென்று, உடனடியாக அந்த மனுவை நிரப்பிக் கொடுங்கள் என்று சொன்னால், 24 மணிநேரத்திற்குள் செய்யவேண்டும் என்று சொன்னால், அது இன்னும் வேதனையாக இருக்கிறது. அதற்கான பரிகாரத்தை மாநில அரசு உடனடியாக செய்யவேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

pushpavanam gaja storm K.Veeramani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe