Skip to main content

’எண்ணிப் பார்த்தால், உள்ளத்தில் உதிரம்தான் கொட்டுகிறது...’-கி.வீரமணி உருக்கம்

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

உச்சநீதிமன்றத்  தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடப்படவேண்டும் என்று வலியறுத்தும் அதேநேரத்தில், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டாமலும், செம்மொழி நிறுவனத்தை சிதைக்கும் வகையிலும் மத்திய அரசு நடந்துகொள்வதும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.தி.மு.க. அரசும் அதற்குத் தலையாட்டுவதும் கண்டிக்கத்தக்கது என்று மொழி உணர்வோடு விளையாடிப் பார்த்தால், தமிழ்நாட்டு மக்கள் எரிமலையாக வெடிப்பார்கள் என்று எச்சரிக்கிறோம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை:

 

’’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடுவது என்ற ஓர் அறிவிப்பு நேற்று வெளிவந்தது. அந்த அறிவிப்பில் உலகில் மூத்த மொழிக்குச் சொந்தக்காரர்களான தமிழ்நாட்டு மக்கள் - அவ்வாறு வெளியிடப்பட்ட மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆங்கிலம் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா, அசாமி மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் மொழி பெயர்ப்பு வெளிவரும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

 

k


தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் பிற மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மொழியாக்கம் செய்வது வரவேற்கத்தக்கது என்று பாராட்டியதோடு, உலகின் மூத்த மொழியான செம்மொழியான தமிழ் அந்த மொழியாக்கப் பட்டியலில் இடம்பெறாததைக் குறிப்பிட்டு அந்தப் பட்டியலில் தமிழ் இடம் பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அந்தப் பட்டியலில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது என்று இன்று ஒரு சில ஏடுகளில் செய்தி வெளிவந்திருப்பது உண்மையானால், அதனை மகிழ்ந்து வரவேற்றுப் பாராட்டுகிறோம்.


அதேநேரத்தில், செம்மொழி தமிழின் இன்றைய நிலை என்ன? முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் முழு முயற்சியினால் தமிழ் செம்மொழி என்று மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. தமிழ் செம்மொழியாக்கப்பட்ட காரணத்தால்தான் அதனைத் தொடர்ந்து சமஸ்கிருதம் முதலிய மொழிகளும் செம்மொழி தகுதி பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

1918 மாரச் 30, 31 ஆகிய நாள்களில் நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் மாநாட்டிலேயே தமிழ் செம்மொழி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது - திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்த கலைஞர் அதனைச் சாதித்துக் காட்டினார்.

1. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையிலும், செம்மொழி ஆய்வுத் தொடர்பான வளர்ச்சிப் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை எண்ணிப் பார்த்தால், உள்ளத்தில் உதிரம்தான் கொட்டுகிறது.

 

மத்திய அரசின் அலட்சியம்!

2. நிரந்தர இயக்குநர் என்பது குறைந்தபட்ச ஏற்பாடுகூட நடக்கவில்லை! தமிழ் செம்மொழி நிறுவனத்தின் தலைவராக முதலமைச்சரே இருந்தாலும், அது மத்திய அரசின் ஆளுகையின்கீழ்தான் உள்ளது.
இந்த நிறுவனத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிப்பது என்பது அடிப்படையான ஒன்று. அதனைக் கூட செய்ய மத்திய அரசு முன்வரவில்லையென்றால்,  அதன் காரணம் என்ன? தமிழ் என்றால், அவ்வளவு அலட்சியம். இளக்காரம் என்பதல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?
பொறுப்பு இயக்குநராக தமிழுக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத ஒருவரை (திருச்சி என்.அய்.டி.யின் பதிவாளரை) நியமித்ததன் நோக்கமென்ன?
அலட்சியம் என்பதைவிட அசிங்கப்படுத்துவதுதானே இதன் பின்னணி?

 

மத்திய பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் முயற்சி

3. 150 நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய நிறுவனத்தில் 40 பேர் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றும் அவலம். போதிய நிதியை ஒதுக்காமல் ஏனோ தானோவென்று நடத்தும் அலட்சியம்!
அதை ஒரு தினக்கூலி நிறுவன நிலைக்குத் தாழ்த்தியுள்ளதைப் போக்கி, உரிய தனித்து இயங்கும் அமைப்பாக ஆக்கிட அனைத்துக் கட்சி, அமைப்புகள் குரல் கொடுக்கவேண்டும்.


4. போதும் போதாதற்கு இந்தத் தனித்தன்மையான நிறுவனத்தை மத்திய பல்கலைக் கழகத்தோடு ஒரு துறையாக இணைக்கப்படும் முயற்சி ஒரு பக்கம், தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை இனமான உணர்வையும், மொழி உணர்வையும், சுயமரியாதையையும் சீண்டிப் பார்க்கும் இத்தகைய கீழிறிக்கச் செயல்களில் ஈடுபட்டால், எதிர்விளைவு கடுமையாக இருக்கும்.


மொழிப் பிரச்சினை தமிழ் மண்ணில் எப்பொழுதுமே அணையாத எரிமலைச் சீற்றம். இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு ஒரு பக்கம், செம்மொழி தமிழை அலட்சியப்படுத்தும் - இழிவுபடுத்தும் போக்கு மற்றொரு பக்கம்! தமிழ்நாடு  இதனை அனுமதிக்காது! அனுமதிக்கவே அனுமதிக்காது!!
தி.மு.க. ஆட்சியில் செம்மொழி என்ற தகுதி கிடைத்த ஒரே காரணத்தால், அ.தி.மு.க. அரசு மத்திய அரசோடு சேர்த்து தாளம் போடுமானால், தமிழ்நாடு மக்களின் போராட்டப் புயலில் மத்திய அரசோடு, மாநில அரசும் வேரற்று வீழும் என்று எச்சரிக்கின்றோம்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தளராது செயல்பட்டு வருபவர்” - கமல்ஹாசன் வாழ்த்து

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

kamalhassan birthday wishes to k veeramani

 

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார். அந்த புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா கி. வீரமணி அவர்களின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! சமூகநீதிக் களத்தில் ‘வீரமணி வெற்றி மணியாக ஒலிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டு வருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர்  கி. வீரமணி அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

 

 

 

Next Story

“பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு பெரியாரின் கொள்கை தான் அடித்தளம்” - சோனியா காந்தி

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Sonia Gandhi says Periyar's policy is the foundation to bring down the BJP

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். அதே போல், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கி ஆதரவை பெருக்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணியை முன்னெடுக்கும் பணிகளை பாராட்டியும் கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்துக்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “பெரியார் திடலுக்கு என்னை அழைத்தற்கு நன்றி. மேலும், இந்தியா கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி. 

 

சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்களின் மூலம் தான் மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். பெரியாரின் கொள்கையும், தொலைநோக்கு பார்வையும் தான் நம்மை வழி நடத்தும். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.